ஓடும் மின்சார ரெயிலில் சிக்க முயன்ற பயணியை மீட்ட ரெயில்வே போலீசார்


ஓடும் மின்சார ரெயிலில் சிக்க முயன்ற பயணியை மீட்ட ரெயில்வே போலீசார்
x
தினத்தந்தி 10 May 2022 7:03 PM GMT (Updated: 10 May 2022 7:03 PM GMT)

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஓடும் மின்சார ரெயிலில் சிக்க முயன்ற பயணியை மீட்ட ரெயில்வே போலீசார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் பாஷா (வயது 54). இவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி செல்வதற்காக பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது மின்சார ரெயில் புறப்பட்டதால் பதற்றமடைந்த அவர், ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மீனம்பாக்கம் செல்வதற்காக பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே போலீசார் அனுஷா, சுமேஷ் ஆகியோர் இதை பார்த்ததும் உடனே சுதாரித்துக்கொண்டு பாஷாவை நடைமேடை பக்கமாக தள்ளி விட்டு காப்பாற்றி உள்ளனர்.

மின்சார ரெயிலில் ஏற முயன்று விபத்தில் சிக்க இருந்த பயணியை ரெயில்வே போலீசார் சுதாரித்து கொண்டு பிளாட்பார்ம் நோக்கி தள்ளி அவரை காப்பாற்றிய சம்பவத்தின் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

இந்த நிலையில் பயணியின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Next Story