வன்முறையில் ஈடுபட்ட பா.ம.க.வை சேர்ந்த 28 பேர் சிறையில் அடைப்பு


வன்முறையில் ஈடுபட்ட பா.ம.க.வை சேர்ந்த 28 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 29 July 2023 6:45 PM GMT (Updated: 29 July 2023 6:45 PM GMT)

நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிராக நடந்த பா.ம.க. போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை கைப்பற்றி மேலும் பலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்

கடலூர்

நெய்வேலி

பா.ம.க. முற்றுகை போராட்டம்

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி தோண்டி எடுப்பதற்காக 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி ஆகிய கிராமங்களில் கடந்த 26-ந்தேதி பயிர்களை அழித்து பணியையும் தொடங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏழை, எளிய விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிர்வாகத்தின் அராஜக போக்கை கண்டித்தும், என்.எல்.சி. நிர்வாகத்தை வெளியேற வலியுறுத்தியும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று முன்தினம் என்.எல்.சி. அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.

வன்முறை

மேலும் என்.எல்.சி. அலுவலகம் நோக்கி நடந்து சென்ற பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். இதை பார்த்து கொந்தளித்த பா.ம.க.வினர் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். இதில் 20 போலீசார் காயமடைந்தனர்.

உடனே போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட 400 பேரும் மாலையில் விடு்விக்கப்பட்டனர்.

28 பேர் சிறையில் அடைப்பு

இதனை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அதன்படி நெய்வேலியை அடுத்த வெங்கடாம்பேட்டை கிராமத்தை சேர்ந்த முருகவேல் மகன் சுபாஷ்(வயது 21), நெய்வேலி 29-வது வட்டம் ராமச்சந்திரன் மகன் வித்தியாசாகர்(29), நெய்வேலியை அடுத்த தொப்ளிக்குப்பம் கிராமம் ரங்கசாமி மகன் ராஜாமணி(48), குறிஞ்சிப்பாடியை அடுத்த பெரியகண்ணாடி பாலாஜி மகன் தர்மராஜ்(21), குறிஞ்சிப்பாடியை அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் நடராஜன் மகன் மணிமாறன்(19), நெய்வேலி 25-வது வட்டம் செல்வகுமார் மகன் ரத்தினகுமார்(31), விருத்தாசலம் பவழங்குடி விஸ்வநாதன் மகன் விஜயராயன்(18), ஸ்ரீமுஷ்ணம் கீழ்பாதி பழனி மகன் குரு(24), நெய்வேலியை அடுத்த காப்பான்குளம் வெள்ளையன் மகன் ராஜா(33), முத்தாண்டிக்குப்பத்தை அடுத்த பேர்பெரியாங்குப்பம் தாண்டவராயன் மகன் ஏழுமலை(32), விருத்தாசலம் பவழங்குடி ராதாகிருஷ்ணன் மகன் பரசுராமன்(27), விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுப்ரமணியன் மகன் அருண்பாண்டியன் (32), சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபாளையம் அர்ச்சுனன் மகன் மாணிக்கம்(33), சின்னம்மசமுத்திரம் கணேசன் மகன் மணிகண்டன்(29), குமாரபாளையம் செந்தில்குமார் மகன் ஆகாஷ்(23), கல்பதனூர் மொரப்பன்காடு சுப்பிரமணி(50), நல்லதம்பி மகன் அங்கமுத்து(39), ஆத்தூர் செல்லியம்மன் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன், கரமேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் துளாரங்குறிச்சி ரவி மகன் கார்த்திக்(26), பிச்சபிள்ளை மகன் செல்வம்(33), அறிவழகன் மகன் அருள்(18), பாகல்குழி கிராமம் இளையராஜா மகன் பிரகாஷ்(21), குணசேகரன் மகன் சுபாஷ்சந்திரபோஸ்(31), நமக்குணம் கிராமம் பாண்டியன் மகன் பாலமுருகன்(22), கரும்பாயிரம் மகன் வசந்த்(25), செங்கல்பட்டு மாவட்டம் சூரடிமங்கலம் செல்லமுத்து மகன் வினோத்(23), சுந்தரம் மகன் எல்லப்பன்(35) ஆகிய 28 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து கைதான அனைவரையும் நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்திய 26 பேரை கடலூர் மத்திய சிறையிலும், 2 சிறுவர்களை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

கண்காணிப்பு கேமராக்களில் காட்சி

வன்முறை நிகழ்ந்த இடத்தில் ஏற்கனவே என்.எல்.சி. சார்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், வருண் மற்றும் வஜ்ரா வாகனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், போராட்டத்தை முழுமையாக வீடியோ எடுக்கும் வகையில் அதிநவீன வசதியுடன் நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வேனில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் பலரை கைது செய்ய...

அதில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் முகம் தெளிவாக தெரிகிறது. அதை வைத்து அவர்கள் யார்-யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்று விசாரித்து வருகின்றனர். மேலும் அடையாளம் தெரிந்தவர்களை கைது செய்வதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கைது எண்ணிக்கை கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


Next Story