பஸ் தலைகுப்புற கவிழ்ந்து 32 பயணிகள் படுகாயம்
மயிலம் அருகே அரசு பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பயணிகள் படுகாயம் அடைந்தனர்
விக்கிரவாண்டி
தலைகுப்புற கவிழ்ந்த பஸ்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள நெடிமோழியனூரில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் அரசு பஸ் ஒன்று திண்டிவனம் நோக்கி புறப்பட்டது. வீடூரை சேர்ந்த அய்யனார்(வயது 35) என்பவர் பஸ்சை ஓட்டினார். கொடிமாவை சேர்ந்த ரவி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். ஆலகிராமம் வளைவில் பஸ் திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த பயணிகள் வலி தாங்க முடியாமல் கூச்சல் எழுப்பினர்.
32 பயணிகள் படுகாயம்
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி சென்று இடி பாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் வந்த ஆலகிராமத்தை சேர்ந்த செண்பகம்(23), வீரமுத்து(60), சத்தியவதி(60), நெடிமோழியனூரை சேர்ந்த ஜெயக்கொடி(29), மலர் வேனில்(52), துளசி(53), மல்லிகா(37), சீதா(32), ஆவுடையார் பட்டு மாரிமுத்து(58) உள்பட 32 பயணிகளும், பஸ் டிரைவர் அய்யனார், கண்டக்டர் ரவி ஆகியோர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர். இவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
என்ஜீனில் புகை
இதற்கிடையே பஸ் என்ஜீனில் இருந்து கரும்புகை வெளியேறியதால் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து புகையை கட்டுப்படுத்தினர். இந்த விபத்து குறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் காயம் அடைந்தவர்களை மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.