பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவால் 8 மாணவ-மாணவிகள் தற்கொலை
பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண் குறைவு காரணமாக 8 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 4 பேர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள செங்காடுவை சேர்ந்தவர் அமலோபர்ராஜ் மகன் ஜோமன்ராஜ் (வயது 17). இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 வணிகவியல் பிரிவில் படித்தார்.
இந்நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாணவர் ஜோமன்ராஜ், வணிக கணிதம் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோமன்ராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் வடவெட்டி கிராமத்தை சேர்ந்த தனசேகரன் மகள் சத்யாவதி (17) தேவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவில் சத்யாவதி தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த சத்யாவதி தனது பாட்டி வீட்டிற்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10-ம் வகுப்பு மாணவர்
விழுப்புரம் அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் நவீன் (15). மணகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த நவீன் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று 500-க்கு 227 மதிப்பெண் எடுத்து இருந்தார். தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த நவீன் வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் வி.புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கீதா. இவரது 3-வது மகள் ஆர்த்தி (15) புதுச்சேரி காட்டேரிக்குப்பத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். தேர்வில் அவர் 500-க்கு 290 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார். எதிர்பார்த்ததை விட மதிப்பெண் குறைந்ததால் விரக்தியடைந்த ஆர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிணற்றில் குதித்து தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அறிவழகன் மகள் ரூபாஸ்ரீ (17). அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். கடந்த சில நாட்களாக ரூபாஸ்ரீ தனது பெற்றோர்களிடம் தேர்வு சரியாக எழுதவில்லை எனவும், தனக்கு குறைவான மதிப்பெண் கிடைக்கும் என தொடர்ந்து கூறிவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் அங்குள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் நேற்று வெளியான தேர்வு முடிவில் மாணவி ரூபாஸ்ரீ 344 மதிப்பெண் அதாவது 70 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்து இருந்தார்.
சேலம், கிருஷ்ணகிரியில்...
சேலம் மாவட்டம் பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது 2-வது மகள் தாமரைச்செல்வி வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு கணித உயிரியல் பாடப்பிரிவு படித்தார். நேற்று தேர்வு முடிவில் 3 பாடங்களில் தாமரைச்செல்வி தோல்வி அடைந்தார்.
இதனால் மனவேதனை அடைந்த தாமரைச்செல்வி தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் மகள் காவ்யா (17) பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரக்கோணம் மாணவி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நாகவேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலு மகள் ரஞ்சனி (15). இவர் அங்குள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவில் 2 பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த ரஞ்சனி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.