சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்


சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்
x

சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா வலியுறுத்தி உள்ளார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஒரு மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான 3-ம் காலாண்டு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பேசுகையில், "கிராம ஊராட்சி மன்றத்தலைவர்கள் தங்களது பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுடன், மக்களுக்காக அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதனடிப்படையில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு முகாம்களில் உங்களது ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் அம்மை தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். காலை உணவு திட்டத்திற்காக புதிதாக 220 சமையலறை கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டும். மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தினை சிறப்பாக நடத்திட வேண்டும். பெண்களை தலைவர்களாக கொண்ட அனைத்து ஊராட்சி மன்றங்களிலும், பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு தங்களது ஊராட்சியினை அனைத்து வசதிகளையும் கொண்ட தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) (பொறுப்பு) இளங்கோ தாயுமானவன், உதவித்திட்ட அலுவலர் கணபதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story