திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பீகாரை சேர்ந்தவர் பலி: சாவில் மர்மம் இருப்பதாக கூறி தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு


திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பீகாரை சேர்ந்தவர் பலி:  சாவில் மர்மம் இருப்பதாக கூறி தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு
x

திருப்பூரில் ரெயிலில் அடிபட்டு பீகாரை சேர்ந்தவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து சாவில் மர்மம் இருப்பதாக கூறி பீகார் தொழிலாளர்கள் ரெயில் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூரில் ரெயிலில் அடிபட்டு பீகாரை சேர்ந்தவர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து சாவில் மர்மம் இருப்பதாக கூறி பீகார் தொழிலாளர்கள் ரெயில் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்து புறப்பட்டது. அப்போது ரெயில்வே மேம்பாலத்துக்கு அடியில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்தார். இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு புகார் அளித்தார். உடனடியாக போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த டைரியில் எழுதப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர். இதில் இறந்தவர் பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் திசரி பகுதியை சேர்ந்த ரகுசிங் மகன் சஞ்சீவ்குமார்(வயது 37) என்பது தெரியவந்தது.

சஞ்சீவ்குமார் திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் ராஜாநகரில் கடந்த 8 ஆண்டுகளாக பனியன் துணிகளில் கறை நீக்கும் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். அவர் எதற்காக திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தார் என்பது தெரியவில்லை. சஞ்சீவ்குமாருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்கள் சொந்த ஊரில் உள்ளனர். சஞ்சீவ்குமார் மட்டும் திருப்பூரில் தங்கியிருந்து தொழில் செய்து வந்துள்ளார்.

சம்பவம் பற்றி அறிந்ததும் இன்று காலை போயம்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ரெயில்வே போலீஸ் நிலையம் முன் திரண்டனர். சஞ்சீவ்குமாரின் செல்போன் மாயமாகியுள்ளது. அவர் எதற்காக இரவு திருப்பூர் ரெயில் நிலையம் வந்தார், தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? இல்லை வேறு எதுவும் காரணமா?, அவர் சாவில் மர்மம் உள்ளது.

எனவே திருப்பூர் ரெயில் நிலையத்துக்குள் சஞ்சீவ்குமார் வந்த வீடியோ காட்சிகளை போலீசார் தங்களிடம் காண்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். போலீசார் வீடியோ காட்சிகளை சேகரித்து தங்களிடம் காண்பிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னம்மாள் மியூரியேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ரெயில் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி சஞ்சீவ்குமார் வந்து சென்ற காட்சிகளை தேடி வருகிறார்கள்.

ஏற்கனவே வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது என்ற தகவல் பரவி வரும் நிலையில் பீகாரை சேர்ந்தவர், ரெயிலில் அடிபட்டு இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி ரெயில் நிலையம் முன் திரண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story