ஓடும் தனியார் பஸ்சில் டிரைவாின் கையில் பெயர்ந்து வந்த கியர் ராடு


ஓடும் தனியார் பஸ்சில் டிரைவாின் கையில் பெயர்ந்து வந்த கியர் ராடு
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் ஓடும் தனியார் பஸ்சில் டிரைவரின் கையில் கியர் ராடு பெயர்ந்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கடலூர்

கடலூர்

தனியார் பஸ்

பண்ருட்டியில் இருந்து நேற்று காலை தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. நெல்லிக்குப்பத்தை அடுத்த கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று என்ஜினுடன் இணைந்து இருந்த கியர் ராடு டிரைவரின் கையில் பெயர்ந்து வந்தது.

இதையடுத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். பின்னர் பஸ்சை டிரைவர் லாவகமாக நிறுத்தினார். உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

வெல்டிங் வைத்து

டிரைவர், கண்டக்டர் இருவரும் அருகில் இருந்த மெக்கானிக் கடைக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களை அழைத்து வந்து உடைந்த கியர் ராடை வெல்டிங் வைத்து சரி செய்தனர்.

இதன் பின்னர் தனியார் பஸ் அங்கிருந்து கடலூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக இந்த விபத்து காரணமாக கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சோதனை காலம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தனியார் பஸ்கள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவங்களை பார்க்கும்போது தனியார் பஸ்களுக்கு இது சோதனை காலமோ என்று நினைக்க தோன்றுகிறது. ஆம், கடந்த 19-ந் தேதி நெல்லிக்குப்பத்தை அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் இரு தனியார் பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பலியானார்கள் 90 பேர் படுகாயம் அடைந்தனர். அதேநாளில் நெல்லிக்குப்பத்தில் டிராக்டர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

4-வது சம்பவம்

நேற்று முன்தினம் கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பஸ் பூண்டியாங்குப்பம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் சாலை விரிவாக்கத்துக்காக போடப்பட்டிருந்த மணலில் மோதி நின்றது. இந்த விபத்திலும் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

தொடர்ந்து நேற்று 4-வது சம்பவமாக பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ்சில் கியர் ராடு டிரைவரின் கையில் பெயர்ந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பஸ்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி வருவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் தனியார் பஸ்களை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story