மாசில்லா போகி கொண்டாட வேண்டுகோள்
மாசில்லா போகி கொண்டாட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தை பொங்கலுக்கு முதல் நாள் இன்று (சனிக்கிழமை) போகி பண்டிகையாக "பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம்". இந்நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் விதமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களையும், தங்கள் வசமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர். இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத்துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படுகிறது. பார்க்கும் திறன் குறைபடுகிறது. இதுபோன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு (15)-ன் படி இது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இன்று டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப்பொருட்களை கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகி திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரியலூர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.