தஞ்சாவூர் அருகே எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அடியில் சிக்கிய டயர்: ரெயிலை கவிழ்க்க சதியா?


தஞ்சாவூர் அருகே  எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அடியில் சிக்கிய டயர்:  ரெயிலை கவிழ்க்க சதியா?
x

தஞ்சாவூர் அருகே எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அடியில் டயர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வரை இரு மார்க்கத்திலும் தினசரி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்றுஇரவு எர்ணாகுளத்தில் இருந்து விரைவு ரெயில் காரைக்கால் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த ரெயில் இன்று காலை திருச்சி, பூதலூர் வழியாக தஞ்சாவூர் நோக்கி வந்தது. அப்போது ரெயிலில் முன்பதிவு பெட்டிகளான எஸ்-1 மற்றும் எஸ்-10 பெட்டிகளுக்கு இடையே பயோ-கேஸ் கழிப்பறைக்கான கழிவுகள் வெளியேறக் கூடிய குழாய்க்கு அடியில் டயர் ஒன்று சிக்கி இருந்தது. இதை பார்த்த பயணி ஒருவர் ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். சற்று நேரத்தில் ரெயில் தஞ்சாவூர் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.

அப்போது டயர் சிக்கியதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவர்கள் ரெயில் சக்கரத்தில் சிக்கி இருந்த டயரை வெளியே எடுத்தனர்.

மேலும் டயரால் என்ஜின் உள்ளிட்ட இடங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர். ஆனால் பாதிப்பு எதுவும் இல்லை. இதையடுத்து தஞ்சாவூர் ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story