தோட்டத்தில் புகுந்து வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை


தோட்டத்தில் புகுந்து வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 6 Sep 2023 9:30 PM GMT (Updated: 6 Sep 2023 9:30 PM GMT)

பழனி அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தி அங்கிருந்த மாட்டுத்தீவனம், அரிசி உள்ளிட்டவற்றை தின்று சென்றது.

திண்டுக்கல்

யானை அட்டகாசம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி, கோம்பைப்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகும் யானைகள் பயிர்களை சேதப்படுத்திவிட்டு பகலில் வனத்துக்குள் சென்றுவிடுகின்றன. சில நேரத்தில் குட்டிகளுடனும், தனியாகவும் யானை உலா வருகிறது.

அதன்படி கடந்த சில நாட்களாக கோம்பைப்பட்டி பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை பயிர்களை நாசம் செய்து வருகிறது. தற்போது அந்த யானை வீடுகளை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

வீடுகள் சேதம்

இந்தநிலையில் கோம்பைப்பட்டியை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி (வயது 60) நேற்று முன்தினம் தனது தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வேலுச்சாமி தோட்டத்தில் புகுந்த ஒற்றையானை அங்குள்ள வாழை, சோள பயிர்களை சேதப்படுத்தியது.

பின்னர் அவரது வீட்டுக்கு வந்து, ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் ஆன மேற்கூரையை சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வெளியே பார்த்தபோது, அங்கு யானை நின்று கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், நைசாக வீட்டின் மற்றொரு அறையில் பதுங்கி கொண்டனர். இதற்கிடையே மேற்கூரையை சேதப்படுத்திய யானை, வீட்டில் இருந்த மக்காச்சோள மாவு, அரிசி, மாட்டுத்தீவனம் ஆகியவற்றை தின்றது. அதன்பிறகு அருகே உள்ள அவரது உறவினர் கருப்புசாமி வீட்டையும் சேதப்படுத்தி அங்கிருந்த மாட்டுத்தீவனம், அரிசி உள்ளிட்டவற்றை தின்று சென்றது.

விரட்டும் பணி

இதற்கிடையே காட்டு யானை தோட்டத்தில் இருந்து சென்றதும், வேலுச்சாமி, கருப்புசாமி குடும்பத்தினர் கோம்பைப்பட்டி பகுதிக்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நேற்று காலை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதமான வீடுகளை பார்வையிட்டனர்.

மேலும் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதனை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோம்பைப்பட்டி பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரைந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story