10 மாத இடைவெளிக்கு பிறகுமுல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு:வல்லக்கடவு பாலத்தை சீரமைக்க தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தல்


10 மாத இடைவெளிக்கு பிறகுமுல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு:வல்லக்கடவு பாலத்தை சீரமைக்க தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் 10 மாத இடைவெளிக்கு பிறகு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது வல்லக்கடவு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

தேனி

கண்காணிப்பு குழு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் உத்தரவை நடைமுறைப்படுத்தி நீர்மட்டம் உயர்வதை கண்காணிக்கவும், அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்து தேவையான ஆலோசனைகள் வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 2014-ம் ஆண்டு மூவர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசு பிரதிநிதி தலைமையில், தமிழக மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து தலா ஒரு பிரதிநிதி என மொத்தம் 3 பேர் இந்த கண்காணிப்பு குழுவில் அங்கம் வகித்தனர். இந்நிலையில் இந்த குழுவில் தமிழக-கேரள அரசுகள் தரப்பில் கூடுதலாக தலா ஒரு பிரதிநிதிகளை நியமித்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி, 5 பேரை கொண்ட இந்த கண்காணிப்பு குழுவினர் கடந்த ஆண்டு மே மாதம் 9-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

அணையில் ஆய்வு

10 மாத இடைவெளிக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்காக கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் விஜயசரண் தலைமையில், தமிழக பிரதிநிதிகளான நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளான நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் வேணு ஆகியோர் தேக்கடியில் இருந்து ஜீப்கள் மூலம் வல்லக்கடவு வனப்பாதை வழியாக நேற்று காலை அணைக்கு புறப்பட்டனர்.

செல்லும் வழியில் வல்லக்கடவு ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதம் அடைந்த பாலத்தை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றனர்.

அணையின் மதகு, சுரங்கப் பகுதி, பேபி அணை, பிரதான அணை ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அணையின் சுரங்கப் பகுதியில் கசிவு நீர் அளவை பார்வையிட்டனர். அது துல்லியமாக இருந்தது. அதனால் அணை பலமாக இருப்பதை உறுதி செய்தனர்.

ஆய்வுக்கூட்டம்

மதகுகளின் செயல்பாடுகளை அறிய அவற்றை இயக்கிப் பார்த்தனர். அவை நல்ல முறையில் இயங்கின. மேலும் அணைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அளவீடு செய்வதற்காக பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகளை அவர்கள் பார்வையிட்டனர். அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் ஆய்வை முடித்துக் கொண்டு படகுகள் மூலம் தேக்கடிக்கு திரும்பினர். இதற்காக தேக்கடியில் இருந்து படகுகள் அங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருந்தன. அவர்கள் சென்ற ஜீப்களை டிரைவர்கள் அணைப் பகுதியில் இருந்து திரும்பி எடுத்துச் சென்றனர்.

வல்லக்கடவு பாலம்

அதன்பிறகு குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் கண்காணிப்புக்குழு தலைவர் விஜயசரண் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 'அணையின் பராமரிப்பு பணிகளுக்கும், பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கும் தேவையான தளவாட பொருட்களை கொண்டு செல்வதற்கு வல்லக்கடவு சாலை மற்றும் ஆற்றுப் பாலத்தை சீரமைக்க வேண்டும்.

பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக அங்கு உள்ள மரங்களை அகற்றுவதற்கான அனுமதியை தாமதமின்றி பெற வேண்டும். வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது' என்று தமிழக பிரதிநிதிகள் தரப்பில் வலியுறுத்தினர்.

நிலுவை பணிகள்

கூட்டத்தை தொடர்ந்து தமிழக பிரதிநிதிகளில் ஒருவரான காவிரி தொழில்நுட்பக் குழும தலைவர் சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், 'கண்காணிப்பு குழுவின் புதிய தலைவர் விஜயசரண் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. அணையில் நிலுவையில் இருக்கும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வல்லக்கடவு சாலை, தமிழகத்தின் புதிய படகுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக விவாதித்தோம்.

பேபி அணையை பலப்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ள வல்லக்கடவு பாதை முக்கியம். எனவே, அந்த பாதையை ஆய்வு செய்ய ஜீப்பில் சென்றோம். பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்கிறோம். அதற்காக அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு வனத்துறை அனுமதி பெறுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப ரீதியாக கேரள தரப்பில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு உரிய பதிலை கொடுத்தோம்' என்றார்.


Related Tags :
Next Story