பக்க விளைவுகள் இல்லாத உயிரியல் கட்டுப்பாடு


பக்க விளைவுகள் இல்லாத உயிரியல் கட்டுப்பாடு
x

பக்க விளைவுகள் இல்லாத உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைபிடித்து தீமை செய்யும் பூச்சிகளைக்கட்டுப்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில் அதிக நன்மை பெறலாம்.

திருப்பூர்

பக்க விளைவுகள் இல்லாத உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைபிடித்து தீமை செய்யும் பூச்சிகளைக்கட்டுப்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில் அதிக நன்மை பெறலாம்.

இரை விழுங்கிகள்

ஒரு உயிர் இன்னொரு உயிரைக்கொன்று அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முறை உயிரியல் கட்டுப்பாடு எனப்படுகிறது. உதாரணமாக விளை நிலங்களில் எலிகளின் எண்ணிக்கையை பாம்புகள் கட்டுப்படுத்துகிறது. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்துகிறது. மயில்களின் எண்ணிக்கையை குள்ள நரிகள் கட்டுப்படுத்துகிறது. குள்ள நரிகளின் எண்ணிக்கை வேறு வன உயிரிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நீண்டு கொண்டே போகும் வாழ்க்கைச் சுழற்சியே உயிரியல் கட்டுப்பாடு ஆகும்.

இந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறை இயற்கையாகவே விளை நிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரிக்கும்போது நன்மை தரக்கூடிய இயற்கை இரை விழுங்கிகள் மற்றும் நுண்ணுயிரிகள் அழிந்து விடுகிறது. இதனால் தான் நமது முன்னோர்கள் இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். குறிப்பாக பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் பூச்சி விரட்டிகளையே பயன்படுத்தினர். தற்போதைய நிலையில் ரசாயனங்களின் பயன்பாட்டால் மண்ணின் உயிர்த்தன்மை குறைந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உயிரியல் கட்டுப்பாடு முக்கிய இடம் பிடிக்கிறது. உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் பூச்சி மேலாண்மைக்காக சாறுண்ணிகள், ஒட்டுண்ணிகள், நோய்க் கிருமிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

சாறுண்ணிகள்

சாறுண்ணிகளான பச்சை கண்ணாடி இறக்கைப்பூச்சி அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி, அந்துப்பூச்சிகளின் முட்டைகள் மற்றும் இளம்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது. கிரிப்டோலீமஸ் பொறிவண்டு, அசுவினி, மாவுப்பூச்சிகள் மற்றும் செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு பொறிவண்டின் புழு நாளொன்றுக்கு 50 அசுவினிகளை சாப்பிடும். 25 நாட்கள் புழுப் பருவத்தில் கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட அசுவினிகளை உணவாக்கி விடும்.

ஒட்டுண்ணிகள்

ஒட்டுண்ணிகளில் முட்டை ஒட்டுண்ணிகள், புழு ஒட்டுண்ணிகள், கூட்டுப்புழு ஒட்டுண்ணிகள் என 3 வகைகள் உள்ளது.டிரைகோடிரம்மா வகை ஒட்டுண்ணிகள் நெல், மக்காச்சோளம், ஆமணக்கு, தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை, மொச்சை, முட்டைகோஸ், பருத்தி, கரும்பு போன்றவற்றில் சேதம் உருவாக்கும் தண்டு துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு, காவடிப்புழு, காய்ப்புழு, குருத்துப்புழு, இடைக்கணுப்புழு போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய்க்கிருமிகள்

தீமை செய்யும் பூச்சிகளில் நோயை உருவாக்கி அவற்றை அழிக்க உதவுவது நோய்க் கிருமிகள் ஆகும். பிவேரியா, வெர்டிசிலியம், மெட்டாரைசியம் வகையைச் சேர்ந்த பூஞ்சையினங்களும், பேசில்லஸ் வகையைச் சேர்ந்த பாக்டீரியாக்களும், நியூக்ளியர் மற்றும் கிரெனலோசிஸ் வகையைச் சேர்ந்த வைரஸ்களும் பூச்சிக் கட்டுப்பாட்டில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பூஞ்சையினங்கள், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, தண்டு துளைப்பான் மற்றும் இலையை உண்ணும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்தவை.

காற்று ஈரப்பதமான சூழ்நிலை மற்றும் குறைந்த வெப்பநிலையில் பூஞ்சையினங்கள் விரைவாக வேலை செய்து அதிக அளவில் பூச்சிகளை தாக்கி அழிக்கும். பாக்டீரியாக்களில் பேசில்லஸ் வகை, புழுக்களை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை தாக்கிய புழுக்களால் அதிகமாக நடமாட முடியாது. வாயிலிருந்தும் உடலின் பின்பகுதியிலிருந்தும் ஊண் போன்ற திரவம் வெளியேறிக் கொண்டே இருக்கும். உடல் கருப்பு நிறமாகி இறுதியில் பூச்சி இறந்து விடும். பச்சைக்காய்ப்புழு, புருட்டூனியாப்புழு, சிவப்பு கம்பளிப்புழு, எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி, காவடிப்புழு போன்றவை இந்த வகை பாக்டீரியாக்களால் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான புழுக்களை அழிப்பதில் வைரஸ் பெரும்பங்கு வகிக்கின்றன. வைரஸ் நோய்க்கிருமிகளுடைய இலைகளைப் புழுக்கள் உண்ணும் போது அவற்றுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. அவை உணவு உண்ணும் தன்மையை இழந்து விரைவில் இறந்து விடும். தற்போது இத்தகைய உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை வேளாண்மைத்துறையினர் விவசாயிகளுக்கு பரிந்துரைக்கத் தொடங்கியுள்ளது நல்ல மாற்றமாகும். மண்ணுக்கும் மனிதர்களுக்கும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுத்தாத உயிரியல் கட்டுப்பாட்டு முறை இயற்கை விவசாயத்தின் வரமாகும்.


Related Tags :
Next Story