வேளாண்மை பட்ஜெட்: விவசாயிகள் வரவேற்பும்- ஏமாற்றமும்


வேளாண்மை பட்ஜெட்: விவசாயிகள் வரவேற்பும்- ஏமாற்றமும்
x

வேளாண்மை பட்ஜெட்: விவசாயிகள் வரவேற்பும்- ஏமாற்றமும்

கரூர்

வேளாண்மை பட்ஜெட்

தமிழக சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். அப்போது வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து 6 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.

தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து கரூர் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

எதிர்பார்த்த அறிவிப்பு இல்லை

க.பரமத்தியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன்:-

எங்கள் அரவக்குறிச்சி பகுதியில் கோடை காலத்தில் முருங்கைக்காய் அமோகமாக விளைகிறது. ஆனால் விலை இருக்காது. மழை காலத்தில் நல்ல விளைச்சல் இருக்காது. ஆனால் விலை அதிகம் போகும். அதனால் எங்களுக்கு கட்டு படியாகும் விலை கிடைக்க முருங்கை பவுடர் தொழிற்சாலை எங்க பகுதிக்கு கேட்டிருந்தோம். ஆனால் வேளாண் பட்ஜெட்டில் அது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. அமராவாதி ஆற்றில் தடுப்பணை எங்க பகுதிக்கு கட்டி தந்தால் குடிநீர் ஆதாரத்தை பெருக்க முடியும்.

அதுகுறித்தும் கேட்டோம் இடம்பெறவில்லை. சாமை, வரகு, குதிரை வாலி, காட்டுக் கம்பு பயிரிட்டால் அறுவடைக்கு ஆட்கள் இல்லை. காரணம் 100 நாள் வேலை. சிறு தானிய விளைச்சலைப்பெருக்க பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. பொதுவாக வெங்காயம், தக்காளி, முருங்கை போன்ற உற்பத்திப் பொருட்களின் விலை விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலையில் ஆண்டு முழுவதும் இருக்கும் படியான திட்ட அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றமே. விவசாயிகளை ஊக்குவிக்கும் பட்ஜெட் இல்லை இது. விவசாயத்தை உறங்க வைக்கும் பட்ஜெட்.

வரவேற்கிறோம்

தோகைமலை அருகே உள்ள மாகாளிபட்டியை சேர்ந்த விவசாயி பிச்சமுத்து:-

நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தரிசு நிலங்களை கண்டறிந்து மா, பலா, கொய்யா நட நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். 2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னகன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்பாக உள்ளது. ஓட்டு மொத்தத்தில் இந்த வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பயனுள்ளதாக உள்ளது

நொய்யல் அருகே நடையனூர் பகுதியை சேர்ந்த விவசாயி சேதுபதி:-

வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி நியமிக்கப்படுவார், 3- 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செயல்படுவார், கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ195 கூடுதலாக வழங்கப்படும், இலவச பம்பு செட்டுகள், இலவச பண்ணை குட்டைகள் அமைக்க ரூ230 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நெல்லுக்கும், கரும்புக்கும் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை நிர்ணயம் செய்திருக்கலாம். மற்றபடி விவசாயிகளுக்கு பயனுள்ள பட்ஜெட்டாகவே இருக்கிறது.

விலை நிர்ணயம் செய்திருக்கலாம்

வெள்ளியணை அருகே உள்ள வெடிக்காரன்பட்டியை சேர்ந்த விவசாயி பிரகலாதன்:-

தமிழக அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவிப்பதே மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். தண்ணீர் பற்றாக்குறை நிலவும் இந்த காலத்தில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.450 கோடிஒதுக்கியிருப்பதும்., உயர் ரக தொழில் நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்து செல்லப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த வெளிநாடு செல்ல தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிகள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது தெரியவில்லை.

சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படுவதும், சிறுதானிய திருவிழா நடத்துவதும், ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படுவதும் சிறுதானியங்கள் குறித்து வருங்கால சந்ததியினர் அறிந்து பயன்படுத்த தொடங்குவர். மேலும் கம்பு, கேழ்வரகு பயிர் செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் தரும் விவசாயிகளுக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்பது விவசாயிகளை ஊக்கப்படுத்துவதாக இருக்கும். இப்படி வரவேற்க கூடிய அம்சங்கள் இருந்தாலும் விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைகின்ற பொருள்களுக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

எதிர்பார்ப்புகள் இடபெறவில்லை

தளவாப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி தங்கராஜ்:- நெல்லுக்கான ஆதார விலை ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் கரும்புக்கான ஆதார விலை ரூ.4 ஆயிரம் ஆகவும் பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதுகுறித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வழங்குவதாக உறுதி அளித்திருந்தனர். இது ஏமாற்றம் அளிக்கிறது. விவசாயிகளின் பல எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட்டில் இடபெறவில்லை.

மகிழ்ச்சி அடைய முடியவில்லை

மகாதானபுரத்தை சேர்ந்த காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம்:-

முந்திரி, பலா, முருங்கை, பனை, வெள்ளரி, மிளகாய், செங்கரும்பு, பன்னீர், கோதுமை, சிறுதானியங்கள், தென்னை என்று தமிழ்நாட்டில் விளையும் பயிர்களுக்கு பாதுகாப்பு உயர் விளைச்சல் தொழில்நுட்பம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி ஊக்கம் படுத்தப்படும் போன்ற பரவலாக விவசாய அறிவிப்புகளை வரவேற்கலாம்.

உணவு பதப்படுத்தலுக்கு தனிக் கொள்கை உருவாக்கப்படும் என்பதும் கழிவிலிருந்து அங்கக உரம் தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்புகளை ஏற்கலாம். ஆனால் விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த விளைபொருட்களுக்கு நியாயமான விலை எப்படி அறிவிக்கப்படும் என்று கூறாதது அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடைய முடியவில்லை.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உழவர் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு, அனைத்து கிராமங்களிலும் உழவர் ஆய்வு மன்றம் உழவர் விவாத குழு உறுப்பினர்களுக்கு அவ்வப்போது சாகுபடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இன்றைய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி கிராம வேளாண் குழுவை புதியதாக அமைக்காமல் முன்பே செயல்பட்டு வரும் உழவர் பயிற்சி நிலையம்உழவர் விவாத குழுவை கிராம வேளாண்மை முன்னேற்ற குழுவாக (உழவர் ஆய்வு மன்றம்) செயல்பட தமிழக அரசு அரசாணை இட வேண்டும், இல்லையானால் விவசாயிகளின் எண்ணிக்கையை விட விவசாயிகளுக்கு பாடம் நடத்தும் விவசாய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். விவசாயத்துக்கு ஒதுக்கப்படும் நிதி விவசாய அதிகாரிகளின் சம்பளத்துக்கே போய் விடும். வேளாண் பட்டாதாரிகள் விவசாய முன்னேற்ற தொழில் தொடங்க அரசு மானியம் அளித்து ஊக்கப் படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story