அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது - ஆவடி காவல்துறை ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் மனு


அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது - ஆவடி காவல்துறை ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் மனு
x
தினத்தந்தி 21 Jun 2022 11:46 AM GMT (Updated: 21 Jun 2022 11:46 AM GMT)

அதிமுக பொதுக்குழுவுக்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட அ.தி.மு.க.வில், இப்போது கோஷ்டி பூசல் வலுத்து வருகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகிறார்கள்.

ஒற்றை தலைமைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் முரண்பாடுகள் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஓ. பன்னீர் செல்வம் மனுவில் தெரிவித்துள்ளார்.


Next Story