அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சி அளவில் ஏலம் விட வேண்டும்
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சி அளவில் ஏலம் விட வேண்டும் என கலெக்டரிடம், பஞ்சாயத்து தலைவர்கள் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சி அளவில் ஏலம் விட வேண்டும் என கலெக்டரிடம், பஞ்சாயத்து தலைவர்கள் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர்.
பஞ்சாயத்து தலைவர்கள்
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் தரப்பில் கலெக்டர் கார்மேகத்திடம் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அதற்கான விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.. 2021-2022-ம் ஆண்டுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடும், பணிகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கள ஆய்வு
இந்தநிலையில் பணிகள் அனைத்தும் மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகம் மூலம் ஏலம் விடப்படுவதாக தெரிகிறது. அப்படி செய்தால் மாவட்ட அளவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளால் கள ஆய்வில் பிரச்சினைகள் ஏற்படும்.
அதை ஊராட்சி நிர்வாக அதிகாரி என்ற முறையில் சரி செய்ய முடியாத நிலை ஏற்படுவதோடு களத்தில் பணிகளின் தரம் குறித்து அறிந்து கொள்ள முடியாது. எனவே, இத்திட்டத்திற்கு ஊராட்சி அளவில் ஏலம் விட்டால் மட்டுமே கள அளவில் பணிகள் சிறப்பாக செயல்பட பஞ்சாயத்து தலைவர்களாகிய எங்களால் ஒப்பந்ததாரர்களை கட்டுப்படுத்த முடியும்.
கிராம அளவில்
இதனால் 2021-22 மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி-II பணிகளை கிராம ஊராட்சி அளவில் ஏலம் விட வேண்டும். முதல்-அமைச்சரின் கனவு திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தினை கிராம அளவில் செயல்படுத்தினால் மட்டுமே சிறப்பாக செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.