நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பால் அம்மன் கோவில் சேதம்


நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பால் அம்மன் கோவில் சேதம்
x

நெம்மேலிகுப்பத்தில் கடல் அலைகள் முன்னோக்கி வந்ததால் கடல் அரிப்பு ஏற்பட்டு அம்மன் கோவில் சேதம் அடைந்தது.

செங்கல்பட்டு

200 மீனவ குடும்பத்தினர் வசிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பத்தில் 200 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக உச்சகட்ட நிலையில் கடல் அலைகள் முன்னோக்கி வந்து மணற்பரப்புகளை அரித்ததால் கரைப்பகுதியில் 5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு அங்குள்ள சிமெண்டு சாலைகளின் கான்கிரீட்டுகள் இடிந்து விழுந்தன.

கோவில் சேதம்

இந்த நிலையில் நேற்று கடற்கரையில் உள்ள வெங்கட்டம்மன் கோவிலுக்குள் கடல் அலைகள் புகுந்ததால் கோவிலின் கான்கிரீட் தரை பகுதி சேதம் அடைந்தது. அந்த நேரத்தில் மீனவர்கள் யாரும் அந்த வழியாக கடலுக்கு செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இடிந்த கான்கிரீட் துகள்கள் கடற்கரையில் சிதறி கிடக்கின்றன. கடல் அலைகள் தாக்கி கோவில் இடிந்து விழுவதற்குள் தமிழக அரசு இந்த பகுதியில் தூண்டில் வலைவுகள் அமைத்து பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கடல் 15 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து கோவில் பகுதியை சேதப்படுத்தி விட்டது.

மறுபுறம் கரை பகுதியினையும் அலைகள் ஆக்கிரமித்துவிட்டதால் தங்கள் படகுகளையும், மீன்பிடி வலைகளைவும் வைக்க இடம் இல்லாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.


Next Story