திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி


திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
x

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியானார்.

திருவள்ளூர்

போக்குவரத்து நெரிசல்

திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான சுப்பிரமணிய சாமி கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. மலைக்கோவிலுக்கு பக்தர்கள் பஸ்சில் செல்ல மலை அடிவாரத்தில் உள்ள தணிகை இல்லத்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருத்தணி-அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

மூதாட்டி பலி

இந்த நிலையில் மலைக்கோவில் இருந்து அதிக அளவில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு அடிவாரத்தில் உள்ள தணிகை இல்லம் அருகே திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சை முந்திச்செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ் சக்கரத்தில் சிக்கியது.இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மூதாட்டி, பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்த உடன் பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மருமகன் உயிர் தப்பினார்

திருத்தணி போலீசார் நடத்திய விசாரணையில் பலியான மூதாட்டி ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 75) என்பதும், இவர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு செல்ல தனது மருமகன் விநாயகம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருத்தணிக்கு வந்தபோது விபத்தில் சிக்கி பலியானதும் தெரிந்தது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற விநாயகம் காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story