நவீன சலவையகங்களை தொடங்க விண்ணப்பிக்கலாம்


நவீன சலவையகங்களை தொடங்க விண்ணப்பிக்கலாம்
x

நவீன சலவையகங்களை தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக சலவை தொழிலில் ஈடுபட்டு வருகின்ற ஆண்கள் மற்றும் பெண்களை குறைந்தபட்சம் 10 பேர் கொண்ட குழுவாக அமைத்து நவீனமுறை சலவையகங்கள் ஏற்படுத்தும் திட்டம் 2022-23-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், சலவை தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 பேர் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்-16) அணுகி பெற்றுக்கொள்ளலாம். கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story