இந்து முன்னணி செயலாளர் உள்பட 45 பேர் கைது


இந்து முன்னணி செயலாளர் உள்பட 45 பேர் கைது
x

கோர்ட்டு உத்தரவுப்படி பள்ளிவாசலுக்கு சீல் வைக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் 8 இடங்களில் ேபாராட்டம் நடந்தது. இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்ட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்

கோர்ட்டு உத்தரவுப்படி பள்ளிவாசலுக்கு சீல் வைக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் 8 இடங்களில் ேபாராட்டம் நடந்தது. இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்ட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோர்ட்டில் வழக்கு

திருப்பூர் 15 வேலம்பாளையம் அருகே மகாலட்சுமி நகரில் உள்ள பள்ளிவாசல் தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

சம்பந்தப்பட்ட கட்டிடம் எந்த பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கப்பட்டதோ, அந்த பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவில் ஐகோர்ட்டு குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் பள்ளிவாசலுக்கு சீல் வைப்பதற்காக நேற்று காலை அதிகாரிகள் சென்றபோது அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். மேலும் பள்ளிவாசல் உள்ள வீதிக்கு யாரும் செல்லாத வகையில் வீதியின் இருபுறமும் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து அடைத்தனர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சகாங்சாய், மாநகர போலீஸ் கமிஷனர் பாபு, துணை கமிஷனர் அபினவ்குமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகளிடம் ஐகோர்ட்டு உத்தரவை மேற்கொள் காட்டி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் நீண்ட நேரமாக சமரசம் எட்டப்படவில்லை. மதியம் வரை பரபரப்பான சூழலே நிலவியது. திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களிலும் நீண்ட நேரம் மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

நடவடிக்கை கைவிடப்பட்டது

இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக பள்ளிவாசல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வருகிற 4-ந்தேதி வரை இந்த பிரச்சினை தொடர்பாக எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதனால் மாலையில் பள்ளிவாசலுக்கு 'சீல்' வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

சுமார் 9 மணி நேரமாக அந்த பகுதி முழுவதும் பதற்றமும், பரபரப்புமாக காணப்பட்டது. திருப்பூரில் பல்ேவறு இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்து முன்னணி மறியல்

இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு 'சீல்' வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியில் மாநில செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் திரண்டனர். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிஷோர் குமார் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் மாலை 6 மணி அளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு, தாராபுரம் ரோடு கோவில்வழி பஸ் நிறுத்தம், பி.என்.ரோடு, மங்கலம் ரோடு ஆண்டிப்பாளையம், பல்லடம் ரோடு சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் சென்று அவர்களை அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் மாநகரில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story