பள்ளிபாளையம் அருகே பெண்ணை தாக்கி பிளேடால் கையை அறுத்தவர் கைது
பள்ளிபாளையம் அருகே பெண்ணை தாக்கி பிளேடால் கையை அறுத்தவர் கைது
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சர்மிளா (வயது 53). இவருடைய கணவர் பாபு கொக்கராயன்பேட்டையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வெண்ணிலா என்பவரின் வீட்டை ரூ.22 லட்சத்துக்கு சர்மிளா வாங்கினாராம். வெண்ணிலா ஒரு மாதத்தில் வீட்டை காலி செய்துவிடுவதாக கூறினார். பின்னர் ஒரு மாதம் முடிந்தும் வெண்ணிலா வீட்டை காலி செய்யவில்லை என்று தெரிகிறது.
இதையொட்டி சர்மிளாவின் மகள் கதிஜா, வெண்ணிலா வசித்த வீட்டுக்கு மேஸ்திரியுடன் சென்றார். அப்போது வெண்ணிலா மற்றும் கதிஜா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அந்தசமயம் அங்கு வந்த வெண்ணிலாவின் மகன் செந்தில்குமார், கதிஜாவை தாக்கி கையை பிளேடால் அறுத்து கொலை மிரட்டல் விடுத்தார். வெண்ணிலாவின் மருமகள் கவிதா, கமலம் மற்றும் சத்யா ஸ்ரீ ஆகியோர் சேர்ந்து கதிஜாவை தாக்கியதாக தெரிகிறது. பலத்த காயம் அடைந்த கதிஜா 108 ஆம்புலன்ஸ் மூலம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கதிஜா கொடுத்த புகாரின்பேரில் மொளசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து கதிஜாவை பிளேடால் அறுத்த செந்தில்குமாரை கைது செய்தார். மேலும் வெண்ணிலா, சத்யா ஸ்ரீ, கவிதா, கமலம், ஆகிய 4 பேரை தேடி வருகிறார்.இதேபோல் செந்தில்குமார் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.