கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டரூ.1.40 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்4 பேர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன சோதனை
சேலம் மாவட்டம் கொளத்தூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு காரைக்காடு சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த காதர் பாஷா (வயது 52) என்று தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் சோதனை நடத்தியபோது அதில் மக்காளச்சோள மூட்டைகளுக்கு அடியில் 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இதையடுத்து லாரி மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
பின்னர் டிரைவர் காதர்பாஷா, லாரி உரிமையாளர் கர்நாடகாவை சேர்ந்த ரகமத்துல்லா (52) மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கடத்தி வந்த கொளத்தூரை சேர்ந்த ரமேஷ் (25), சுகைல் (24) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.