ஈரோட்டில் தீயில் கருகிய பெண் சாவு
ஈரோட்டில் விளக்கு ஏற்றியபோது ஆடையில் தீப்பற்றி உடல் கருகிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தீக்காயம்
ஈரோடு லட்சுமிகார்டன் சேரன் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 29). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. கடந்த 21-ந் தேதி ரமேஷ்குமார் வெளியில் சென்று இருந்தார். அப்போது கிருஷ்ணவேணி மாடியில் உள்ள அறைக்கு சென்றார்.
அங்கு விளக்கு ஏற்ற முயன்றபோது அவர் அணிந்திருந்த நைட்டியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதை அவர் கவனிப்பதற்குள் நைட்டியில் மளமளவென தீ பரவியது. இதனால் தீக்காயம் ஏற்பட்டு உடல் கருகியது. மேலும், தீயை அணைத்து கொள்வதற்காக அவராகவே குளியல் அறைக்குள் சென்று தண்ணீரை ஊற்றிக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர்.
சாவு
தீயில் கருகிய கிருஷ்ணவேணி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணவேணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணவேணிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமாரும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.