பழனியில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம்


பழனியில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 3 March 2023 8:30 PM GMT (Updated: 3 March 2023 8:31 PM GMT)

பழனியில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திண்டுக்கல்

பழனியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் சார்பில் மஞ்சப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், பழனியில் நேற்று நடைபெற்றது. பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளரும், பழனி கோவில் இணை ஆணையருமான நடராஜன் தலைமை தாங்கினார்.

துணை ஆணையர் பிரகாஷ், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி, இன்ஸ்பெக்டர் உதயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். பின்னர் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மஞ்சப்பையின் முக்கியத்துவம் குறித்து நாடகம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை ஆடி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கோவில் இணை ஆணையர் நடராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், திண்டுக்கல் சாலை, ஆர்.எப்.ரோடு, கான்வென்ட் ரோடு, புதுதாராபுரம் ரோடு என நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று அடிவாரம் குடமுழுக்கு அரங்கில் நிறைவு பெற்றது.

இந்த ஊர்வலத்தில் பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் 2 ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின்போது, மாணவிகள் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் மஞ்சப்பையுடன் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Related Tags :
Next Story