நாமக்கல் மாவட்டத்தில் போலீசார், அரசு பள்ளி, கல்லூரிகள் சார்பில்போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


நாமக்கல் மாவட்டத்தில் போலீசார், அரசு பள்ளி, கல்லூரிகள் சார்பில்போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 26 Jun 2023 7:00 PM GMT (Updated: 26 Jun 2023 7:01 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் போலீசார், பள்ளிகள், அரசு, தனியார் கல்லூரி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ராசிபுரம், திருச்செங்கோடு

ராசிபுரம் காவல்துறை மாவட்ட மனநல திட்டம் இணைந்து திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி முன்பு மனிதசங்கிலி மற்றும் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட மனநல திட்ட மருத்துவர்கள் முகிலரசி, ஜெயந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரன், ஹேமாவதி, உளவியலாளர் அர்ச்சனா, மனநல ஆலோசகர் ரமேஷ் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி 1,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், வடக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, சங்ககிரி ரோடு வழியாக மீண்டும் அரசு மகளிர் பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தின்போது மாணவ, மாணவிகள் போதை பொருள் ஒழிப்பு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். இதில் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

குமாரபாளையம், சேந்தமங்கலம்

குமாரபாளையம் போலீசார் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியா, அமல்ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தின்போது போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழீ மற்றும் ஆசிரியர்கள் தகவல் தொடர்பு ஆசிரியர் கவிராஜ், பேரிடர் மேலாண்மை குழு பொறுப்பு ஆசிரியர் மகேஷ் குமார், சாரணிய இயக்க ஆசிரியர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம் அருகே வெட்டுக்காடு அரசு கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரி முதல்வர் பாரதி தலைமை தாங்கினார். ஊர்வலம் மெயின் ரோடு வழியாக சென்று பின்பு கல்லூரி திடலை வந்தடைந்தது. ஊர்வலத்தின்போது பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரி சக்திவேல், கணிதவியல் துறை இணை ஆசிரியர் செந்தில்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருளின் தீமைகள் குறித்து எடுத்து கூறினர். இதில் மாவட்ட மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராதா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரபு, அலுவலக பணியாளர் சரவணன், அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எருமப்பட்டி

எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், வார்டு கவுன்சிலர் உதயகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் பள்ளியில் தொடங்கி மெயின் ரோடு, ராஜவீதி வழியாக எருமப்பட்டி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியை சென்றடைந்தது.


Next Story