திருவள்ளூர் அருகே பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் வாலிபருக்கு வெட்டு - 10 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் வாலிபருக்கு கத்தியால் வெட்டு விழுந்தது. இந்த மோதல் தொடர்பாக போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த புட்லூர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 21). நேற்று முன்தினம் மோகன் தனது நண்பர்களான பெரியார் நகரை சேர்ந்த பிரகாஷ், பிரசாந்த், புஷ்பராஜ் ஆகியோருடன் சேர்ந்து நண்பர் அஜித் என்பவரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக கேக் வெட்டி கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த திருவள்ளூர் காந்திபுரத்தை சேர்ந்த சந்தோஷ், ஆகாஷ், யோகேஷ், தேவா, விஜி ஆபேல் மற்றும் எடப்பாளையத்தை சேர்ந்த சரவணன் என 7 பேர் கொண்ட கும்பல் மோகனையும் அவரது நண்பர்களையும் தகாத வார்த்தையால் பேசி கையால் தாக்கினார்கள்.
பின்னர் ஆகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்த் தலையில் வெட்டினார்.
இதை பார்த்து தடுக்க வந்த அவரது நண்பர்களான பிரகாஷ் மற்றும் மோகனையும் கத்தியால் தலையால் வெட்டியுள்ளார். பதிலுக்கு மோகன், பிரகாஷ், பிரசாந்த் மற்றும் அவர்களது நண்பர் கள் ஒன்று சேர்ந்து சந்தோஷையும், அவரது நண்பர்களையும் கையாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கினார்கள்.
இதில் காயமடைந்த மோகன், பிரசாந்த், பிரகாஷ், சந்தோஷ் ஆகியோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பை சேர்ந்த மேற்கண்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.