வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளை
x

சிதம்பரத்தில் வீ்ட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கடலூர்

சிதம்பரம்

திருமணத்துக்காக...

சிதம்பரம் பள்ளிப்படை வெற்றி நகரை சேர்ந்தவர் ஜாபர்அலி(வயது 56). இவர் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். அங்குள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அவரது மகள் ராஷிதா ரைஹானா(20) தற்போது வீட்டில் இருந்த படியே வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தனது அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஜாபா் அலி கடந்த 1-ந் தேதி சிங்கப்பூரில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு சிதம்பரத்துக்கு வந்தார்.

நண்பர் வீட்டுக்கு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஷிதா ரைஹானா சிதம்பரத்தில் உள்ள வீ்ட்டில் மடிக்கணினி மூலம் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென இன்டர்நெட் சேவை தடை ஏற்பட்டது.

இதையடுத்து இன்டர் நெட் சேவைக்காக வீட்டை பூட்டி விட்டு ஜாபர் அலி தனது மனைவி, மகள் ஆகியோருடன் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு ராஷிதா ரைஹானா மடிக்கணினி மூலம் வேலை செய்து கொண்டிருந்தார்.

30 பவுன் நகைகள் கொள்ளை

பின்னர் வேலை முடிந்ததும் அங்கிருந்து நேற்று அதிகாலை 2.30 மணி ஜாபர் அலி தனது குடும்பத்தினருடன் பள்ளிப்படையில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவில் போடப்பட்ட பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 30 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இது குறித்து ஜாபர் அலி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வரவைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிபோய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வீ்ட்டின் கதவு, ஜன்னல், பீரோவில் இருந்த ரேகைகளை பதிவு செய்ததோடு, தடயங்களையும் சேகரித்தனர்.

வலைவீச்சு

பின்னர் இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிதம்பர பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story