சேலம், நாமக்கல் மாவட்டங்களில்புதிதாக 46 செல்போன் கோபுரங்கள் அமைப்புபி.எஸ்.என்.எல். பொது மேலாளர் தகவல்


சேலம், நாமக்கல் மாவட்டங்களில்புதிதாக 46 செல்போன் கோபுரங்கள் அமைப்புபி.எஸ்.என்.எல். பொது மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:30 AM IST (Updated: 3 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 4-ஜி சேவையுடன் புதிதாக 46 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாக பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சுபா கூறினார்.

46 புதிய செல்போன் கோபுரங்கள்

சேலம் கோட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சுபா நேற்று கொல்லிமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செல்போன் சிக்னல் இல்லாத இடங்களுக்கு செல்போன் வசதி வழங்குவதற்காக பாரத பிரதமரின் புதிய திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 46 புதிய செல்போன் கோபுரங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கொல்லிமலையில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களின் நலன் கருதி எடப்புளிநாடு, பெரக்கரைநாடு, அடுக்கம் புதுக்கோம்பை, குண்டனிநாடு உள்ளிட்ட 13 இடங்களில் புதிய செல்போன் கோபுரங்கள் அமைக்க பி.எஸ்.என்.எல். நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு 5 கோபுரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளன. டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து செல்போன் கோபுரங்களும் அமைத்து முடிக்கப்படும்.

4-ஜி இணைப்புகள்

இதன் மூலம் கொல்லிமலையில் ஏற்கனவே எந்தவித செல்போன் சிக்னலும் இல்லாத, வாடிக்கையாளர்களுக்கு 4-ஜி இணைப்புகள் வழங்கப்படும். லாப நோக்கம் இல்லாமல் அனைத்து மலைவாழ் மக்களுக்கும் செல்போன் மற்றும் இண்டர்நெட் கிடைக்கும் வகையில் இந்த செல்போன் கோபுரங்கள் ஒவ்வொன்றும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகின்றன.

மேலும் பி.எஸ்.என்.எல். மூலம் நாமக்கல் நகர பகுதியில் 5 புதிய செல்போன் கோபுரங்களும், ராசிபுரத்தில்-3, சேந்தமங்கலத்தில்-3, கெங்கவல்லியில்-4, பனமரத்துப்பட்டியில்-2, வாழப்பாடியில்-4 மற்றும் ஏற்காட்டில் 12 புதிய செல்போன் கோபுரங்களும் அமைக்கப்பட உள்ளன.

33 ஆயிரம் இணைப்புகள்

இதுதவிர அடுத்த ஆண்டு சேலம் கோட்ட பி.எஸ்.என்.எல் மூலம் மேலும் 60 இடங்களில் 4-ஜி சேவையுடன் கூடிய செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. பி.எஸ்.என்.எல் மூலம் எப்.டி.பி.எச். இண்டர்நெட் சேவை பைபர் ஆப்டிகல் கேபிள் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி பகுதிகளில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு இதுவரை 33 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மாதம் ரூ.249 கட்டணத்தில் டேட்டாவும், போன் வசதியும் இணைந்து வழங்குவதால், இந்த இணைப்பை அனைவரும் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story