லாரி மீது பஸ் மோதி டிரைவர் பலி


லாரி மீது பஸ் மோதி டிரைவர் பலி
x

வேலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பஸ் டிரைவர் பலியானார். இதில், படுகாயமடைந்த 17 பேருக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூர்


வேலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பஸ் டிரைவர் பலியானார். இதில், படுகாயமடைந்த 17 பேருக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரி மீது பஸ் மோதல்

சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூரை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. நேற்று காலை 5 மணி அளவில் வேலூர் அருகே உள்ள மேல்மொணவூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே வந்த போது முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. பஸ் மோதிய வேகத்தில் லாரி சிறிதுதூரம் சென்று சாலையின் நடுவே உள்ள இரும்பு கம்பிகளை இடித்து தள்ளிவிட்டு மின்கம்பத்தில் மோதியபடி நின்றது.

விபத்தில் பஸ் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கேட்டை அருகே உள்ள உடையந்தஹள்ளி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் (வயது 53), கண்டக்டர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பச்சூரை சேர்ந்த கிருஷ்ணன் (50) மற்றும் பயணிகள் விருத்தாசலம் அஜித் (26), பெருந்துறை ஜோதி (35), காட்பாடி அசோக்நகர் தாணு (58), மாதனூரை சேர்ந்த வேலூர் மத்திய ஜெயில் சமையல் ஊழியர் ஞானாம்பிகை (31), வாணியம்பாடி குந்தாணிமேடு கிராமம் ஜெயலட்சுமி (47), ஆத்தூர் செந்தாரப்பட்டி கிராமம் தனபால் (63), வேப்பங்குப்பம் போலீஸ் நிலைய முதல்நிலை காவலர் மகாபிரசாத், பசுமாத்தூர் கோபிநாத் (35), பள்ளிகொண்டா புத்தர்தெரு சரவணன் (48), ஆம்பூர் கஸ்பா கோவிந்தன் (56), அவருடைய மனைவி ராதா (55), ஊத்தங்கரை கட்டேசி கிராமம் குழந்தைவேல் (38), தாராபுரம் ஆண்டிபாளையம் மயில்சாமி (43), அவருடைய மனைவி ருக்மணி (38), வேடசந்தூர் ரெட்டிகுத்துப்பட்டி மணிமேகலை (40) ஆகிய 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

டிரைவர் பலி

இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு ஆம்புன்சில் அரசு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மாதப்பனை உடனடியாக மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் அவரை மீட்டு வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவிக்கு பின்னர் மாதப்பன் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 17 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கலெக்டர் ஆறுதல் கூறினார்

விபத்து குறித்து தகவலறிந்த வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். பின்னர் கலெக்டர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு விபத்து குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

இந்த விபத்தால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார், லாரிகள் நீண்ட தூரத்துக்கு வரிசையாக அணிவகுத்து நின்றன. இதையடுத்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பஸ், லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.


Related Tags :
Next Story