பழைய பஸ் நிலையம் புதுசாச்சு... புதுசோ இப்ப பழசாச்சு..!
பழைய பஸ் நிலையம் புதுசாச்சு... புதுசோ இப்ப பழசாச்சு..!
திருப்பூர்
திருப்பூர் பழைய பஸ் நிலையம் கடந்த காலங்களில் போதுமான வசதியின்றி காணப்பட்டது. இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு தற்போது பல்வேறு வசதிகளுடன் உள்ளது. இந்த நிலையில் பி.என்.ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையம் தற்போது போதுமான வசதியின்றி மோசமான நிலையில் காட்சியளிக்கிறது.
இருக்கைகள் சேதம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் மற்றொரு பகுதியில் இருந்து கோவை, ஈரோடு, கோபி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது பஸ் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இங்குள்ள இருக்கைகள் சில சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் அந்த இருக்கைகளில் பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடைந்து போன ஒரு இருக்கையை தாங்கி பிடிக்கும் வகையில் சிமெண்டு கற்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் அமரும் போது கீழே விழக்கூடிய நிலை உள்ளது. மேலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்த அளவு இருக்கை வசதி இல்லாத காரணத்தால் பெரும்பாலான பயணிகள் பஸ்சுக்காக கால் கடுக்க காத்திருக்கும் அவலம் உள்ளது.
துர்நாற்றம்
இதேபோன்று பஸ் நிலையத்தில் இலவச கழிவறை இல்லை. இதன் காரணமாக பல பயணிகள் கட்டண கழிப்பிடத்தை தவிர்த்து விட்டு பஸ் நிலையத்தில் உள்ள திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் பஸ் நிலையம் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி, பொதுவெளியில் அனைவரும் பார்க்ககூடிய இடத்தில் பலர் சிறுநீர் கழிப்பதால் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
இதேபோல், இங்கு மது பிரியர்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. ஆதரவற்றவர்கள் பலர் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே படுத்து கிடக்கும் நிலையில் குடிமகன்களும் போதையில் ஆங்காங்கே படுத்து உருள்கின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் ஆங்காங்கே காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன. இதேபோல், இங்குள்ள ஒரு தள்ளுவண்டியில் காலி மதுபாட்டில்களும், பிளாஸ்டிக் தம்ளர்களும் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. மேலும், தின்பண்டங்கள், எச்சில் உணவுகளும் கிடக்கின்றன. இவ்வாறு மது பிரியர்கள் ஆங்காங்கே விட்டு செல்லும் குப்பைகளாலும் துர்நாற்றம் வீசுகிறது.
தூய்மையாகுமா?
இதேபோன்று பஸ் நிலையத்தில் கடைகள் அமைந்துள்ள இடத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் கடைகளுக்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், இங்கு சில இடங்களில் கழிவுநீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு பஸ் நிலையம் குப்பை, துர்நாற்றத்துடன் இருப்பதால் பழைய பஸ் நிலையம் புதிதாகி விட்டது. ஆனால் புதிய பஸ் நிலையம் இப்போது பாழடைந்து வருகிறது என பயணிகள் ஆதங்கம் ெகாள்கின்றனர்.
எனவே, பஸ் நிலையத்தில் குடிமகன்களின் நடமாட்டத்தை குறைக்கவும், குப்பைகளை முறையாக அகற்றி பஸ் நிலையத்தின் தூய்மையை காக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.