பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து விபத்து - 3 பேர் படுகாயம்
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் இன்று வழி சோதனை பாளையம் பகுதியில் நடைபெற இருந்த சுபநிகழ்ச்சிக்கு தனது தாய் மற்றும் பாட்டியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதையடுத்து புஷ்பராஜ் செல்போனை பாக்கெட்டில் இருந்து தூக்கி வீச முயற்சித்த போது இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
செல்போன் வெடித்ததில் புஷ்பராஜுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் சென்ற புஷ்பராஜ், அவரது தாய் மற்றும் பாட்டி மூவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்கள் மூவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.