தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு - அண்ணாமலை பேட்டி


தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு - அண்ணாமலை பேட்டி
x

தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாத யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கினார். தொடர்ந்து நேற்று 6-வது நாளில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பாத யாத்திரை மேற்கொண்டார். காரைக்குடியில் இருந்து வந்த அண்ணாமலைக்கு தேசிய நெடுஞ்சாலையில் கடியாப்பட்டி முக்கத்தில் கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 10.30 மணிக்கு யாத்திரையை தொடங்கி திருமயம் பஸ் நிலையம் வரை அவர் நடந்து வந்தார். சாலையின் இருபுறமும் பொதுமக்களை அண்ணாமலை சந்தித்து பேசினார். பெண்கள் முளைப்பாரி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்றனர். பெருமாள் கோவில் அருகே ஜல்லிக்கட்டு காளைகள், வண்டி மாடுகள் நிறுத்தப்பட்டிருந்ததை அவர் பார்வையிட்டு காளைகளை தடவி கொடுத்தார்.

திருமயம் பஸ் நிலையத்தில் பேசிய பின் லேனா விளக்கில் பழனிசாமி என்பவரது சிற்பங்கள் தயாரிக்கும் கலைக்கூடத்தை அண்ணாமலை பார்வையிட்டார். அவரிடம் தொழில் பற்றி கேட்டறிந்ததோடு, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த யாத்திரையை பொறுத்தவரை பெரும் எழுச்சியாக இருக்கிறது. நல்லதொரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த யாத்திரை பற்றி எதிர்க்கட்சியினர் விமா்சனம் வைப்பதன் மூலம் யாத்திரைக்கான நோக்கம் பூர்த்தி அடைகிறது. பிரதமர் மோடி 9 ஆண்டுகள் செய்ததை இந்த யாத்திரையில் பேசுகிறோம். அதேபோல தி.மு.க. அரசின் தவறுகளை ஆதாரத்தோடு தொடர்ந்து வைத்து கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என கேட்கிறோம். அனைத்து இடத்திலும் மக்கள் வரவேற்கின்றனர். நாங்கள் யாருக்கும் போட்டியாளர்கள் கிடையாது.

தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக தலைவர்கள் அரசியல் கட்சியினரை அழைத்து பேசி வருகின்றனர். அ.தி.மு.க. அதிகாரபூர்வமாக கூட்டணியில் உள்ளது. எங்களது பணியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காததால் அவர் விரக்தியில் இல்லை. நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை.

கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும். கூட்டணியில் கதவுகள் திறந்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. பாதயாத்திரையை முடித்து விட்டு கட்சி வேலை பார்ப்பது தான் எனது வேலை.

தி.மு.க. 2-வது பைல் மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 3-வது பட்டியலும் வரும். தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்து பேசக்கூடிய கட்சி பா.ஜ.க. தான். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை சுட்டிக்காட்டுகிறோம். மக்கள் மன்றத்தில் வைக்கிறோம். அரசுக்கு சாராத அமலாக்கத்துறை, சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் ஊழல் செய்து அமலாக்கத்துறையிடம் மாட்டிக்கொண்டவர். அவர் அமலாக்கத்துறை வேண்டாம் என்று தான் சொல்வார். கோடநாடு வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story