வி.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


வி.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 27 Jun 2022 10:06 AM GMT (Updated: 27 Jun 2022 10:07 AM GMT)

'இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை' என்று போற்றப்பட்ட வி.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

சென்னை:

பாரத மிகுமின் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஜூன் 26) சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தொழிலதிபர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

'திருப்புமுனை மனிதர்' என்றும் 'இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை' என்றும் போற்றப்பட்ட பத்மவிபூஷன் வி.கிருஷ்ணமூர்த்தி வயதுமூப்பின் காரணமாக நேற்று மறைவுற்றார் என்றறிந்து மிகவும் வருந்தினேன்.

பாரத மிகுமின் நிறுவனம், இந்திய உருக்கு ஆணையம், மாருதி உத்யோக் எனப் பல நிறுவனங்களிலும் அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் இந்திய மக்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும். பல்வேறு பிரதமர்களுடன் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய பழுத்த அனுபவத்துக்குச் சொந்தக்காரரான வி.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் மற்றும் தொழில்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story