மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x

சென்னையில் ரூ.167 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்-தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்திட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, பணிகளும் விரைவாக நடைபெற்றது.

வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ளப்பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. அந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று, தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளன.

அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்ற நிரந்தர தீர்வாக ஆலோசனை குழுவின் பரிந்துரையின்படி மூலதன நிதியின் கீழ், ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 46 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், சென்டிரல் ரெயில் நிலையம், ரிப்பன் கட்டிடம், ராஜா முத்தையா சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிங்கார சென்னை (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் 600 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போர்க்கால அடிப்படையில்...

இதேபோல நெடுஞ்சாலைத்துறை சார்பில் வால்டாக்ஸ் சாலையில், சென்னை சென்டிரல் முதல் மூலக்கொத்தளம் வரை ரூ.33 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 4,600 மீட்டர் நீளத்திற்கான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 8 சிறுபாலங்கள் மற்றும் 3 அணுகு கால்வாய்கள் அமைக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

நீர்வளத்துறை சார்பில் பருவமழை முன்எச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள சென்னையில் ரூ.20 கோடியில் 31 பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, பேசின் பாலத்திற்கு அருகில் வடக்கு பக்கிங்காம் கால்வாயில் ரூ.40 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள், மாநகராட்சி சார்பில் டெமலஸ் சாலை, முனுசாமி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேக்கத்தை அகற்ற நிரந்தர தீர்வாக ஆலோசனை குழு பரிந்துரையின்படியும், சென்னை ஐ.ஐ.டி.யின் ஒப்புதலும் பெற்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3.39 கோடி மதிப்பீட்டில் 725 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

ரூ.167 கோடி

புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.6.28 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்,

கொளத்தூர் பகுதியில் தேங்கும் மழைநீரை அகற்ற நிரந்தர தீர்வாக கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் 92 சாலைகளில் ரூ.96.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக வேலவன் நகர் பகுதியில் பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கொளத்தூரில் உள்ள டெம்பிள் ஸ்கூல், வீனஸ் நகர், செல்வி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் தானியங்கி நீர் இரைப்பான் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.167.08 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இம்மாத இறுதிக்குள்...

இப்பணிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், 'நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி அளிக்கிறதா?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ''கடந்த வாரம் தென்சென்னை பகுதியில் ஆய்வு செய்தேன். அங்கு கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கிறது. வடசென்னையில் இப்போது ஆய்வு செய்கிறேன். மழை அவ்வப்போது பெய்து வருவதால் பணிகள் தடைபட்டிருக்கிறது. நிச்சயமாக குறைந்தபட்சம் 15 நாட்கள் அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் எல்லா பணிகளும் முடிவடைந்துவிடும் என்ற திருப்தி எனக்கு ஏற்பட்டிருக்கிறது. எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய அளவுக்கு பணிகள் நடந்திருக்கிறது'' என்று பதில் அளித்தார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் உள்பட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.


Next Story