கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை
திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நேற்று நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நேற்று நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
புனித வெள்ளி
ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டர் திருநாளின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத்தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை பெரிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்றுமுன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கு போன்றவையும் நடந்தது. நேற்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து செல்லும்போதும், அந்த சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 திருவசனங்களை அவர் கூறினார் என்று புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனைகள் நடந்தன.
சிலுவைப்பாதை வழிபாடு
திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் தேவாலயத்தில் பங்கு தந்தை ஹைசிந்த் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. குமார் நகர் புனித சூசையப்பர் தேவாலயம், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் ஆயர் ஆனந்த குமார் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதுபோல் ஆசர் நகர்சி.எஸ்.ஐ. தூய லூக்கா தேவாலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும், மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த 3-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை அதிகாலை தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடுவார்கள்.