ஒரு ஆண்டுக்கு பிறகு கொலை வழக்கில் துப்பு துலங்கியது கஞ்சா விற்ற பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் வாலிபர் குத்தி கொலை


ஒரு ஆண்டுக்கு பிறகு கொலை வழக்கில் துப்பு துலங்கியது கஞ்சா விற்ற பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் வாலிபர் குத்தி கொலை
x

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு கிடந்தவர், அடையாளம் தெரிந்தது. கஞ்சா விற்ற பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் நண்பர்களே அவரை கத்தியால் குத்தி கொன்றது தெரிந்தது. 3 பேரும் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் தாம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கையில் 'மெகா' என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு இருந்தது.

உடல் அழகிய நிலையில் இருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை. கொலை செய்யப்பட்ட நபர் யார்? என தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கன்னியப்பன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஓராண்டுக்கு பிறகு கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அடையாளம் தெரிந்தது. அவர் சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற பல்லு கார்த்திக் (வயது 29) ஆவார்.

பல்லு கார்த்திக் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அயப்பாக்கம் பகுதியில் தனது நண்பர் சாவுக்கு சென்றிருந்தார். அப்போது கஞ்சா விற்பனையில் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கத்தில் அவருடைய நண்பர்களான அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (27), அருண்குமார் (38), சரவணன் (28) ஆகியோர் மது போதையில் இருந்த பல்லு கார்த்திக்கை கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை போர்வையால் சுற்றி தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் வீசியதுடன், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை புதைத்துவிட்டு 3 பேரும் தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சதாம்உசேன், அருண்குமார், சரவணன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த 3 பேரும் நேற்று தாம்பரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்,

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல்லு கார்த்திக் கஞ்சா விற்பனையில் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்கனவே தங்களுடன் தகராறில் ஈடுபட்டதுடன், தங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் தாங்கள் முந்திக்கொண்டு அவரை கொன்று உடலை வீசியதாக ஒப்புக்கொண்டனர். 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story