"பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் உத்தரவு" - அமைச்சர் சேகர்பாபு


பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் உத்தரவு - அமைச்சர் சேகர்பாபு
x

காசிக்கு 200 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கடந்த ஆண்டே முதல்-அமைச்சர் அறிவித்ததாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்கள் என 200 பேரை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறு இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆன்மிகப் பயணம் செல்ல விரும்புவோர் 60 வயது முதல் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், பத்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்து வர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், காசி-தமிழ் சங்கமத்திற்கு போட்டியாக தமிழக அரசு காசி யாத்திரையை தொடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், "கடந்த ஆண்டு மே மாதம் 4-ந்தேதி நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 27-ல், காசிக்கு 200 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அதற்கு தேவையான நிதி ரூ.50 லட்சத்தை தமிழக அரசே ஏற்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

எனவே மத்திய அரசும், மற்ற மாநில அரசுகளும் தமிழக அரசின் திட்டங்களை பின்பற்றும் சூழல் நாட்டில் உருவாகியுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் ஆகும். யாருக்கும் போட்டி என்பது எங்கள் துறையின் நோக்கம் அல்ல. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி தான் அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.


Next Story