கோவை கார் வெடிப்பு சம்பவம்: குன்னூரை சேர்ந்த இளைஞரிடம் விசாரணை


கோவை கார் வெடிப்பு சம்பவம்: குன்னூரை சேர்ந்த இளைஞரிடம் விசாரணை
x

குன்னூரை சேர்ந்த உமர் பரூக் என்பவரை பிடித்து கோவை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கோவை

கோவை, கோவை இதயப் பகுதியில் அமைந்துள்ள உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் 23-ந் தேதி அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து அதில் இருந்த ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விமானம் மூலம் கோவை விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.இந்த நிலையில், சிலிண்டர் வெடித்து இறந்தவர் ஜமேஷா முபின் (வயது 29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு பொருட்கள் சிக்கன.

மேலும் அவரது வீட்டில் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு வீட்டில் இருந்து ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் வெள்ளை நிறத்திலான மர்ம பொருட்களை வெளியே எடுத்துச் சென்றது தெரிய வந்தது.ஜமேஷா முபின் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அதில் ஜமேசா முபினுடன் இருந்த உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறையை சேர்ந்த உமர் பரூக் (35) என்பவரை பிடித்து கோவை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். செல்போன் சிக்னல் செயல்பாடு அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இவரை விசாரணைக்கு அழைத்து செல்வதாகவும், இவர் குன்னூர் பகுதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் வந்து வீடு எடுத்து தங்கி உள்ளார் என்றும், போலீஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று அதே பகுதியில், கூடுதல் எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஆய்வாளர்கள் சுபாஷினி, பிருத்திவ்ராஜ் உட்பட போலீசார் மற்றொருவரின் வீட்டில் 2 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, அந்நபரை அங்கிருந்து விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக ஏடிஎஸ்பி. கிருஷ்ணமூர்த்தி கூறும்போது: "குன்னூரில் இருந்து அழைத்துச் சென்ற நபருடன் தொடர்பில் இருந்த மற்றொருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளோம்" எனக் கூறினார்.


Next Story