காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்


காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 July 2023 7:30 PM GMT (Updated: 7 July 2023 7:31 PM GMT)

திண்டுக்கல் உள்பட 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 73 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

ராகுல்காந்திக்கு தண்டனை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில், குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல்காந்தியின் எம்.பி. பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மீதான விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில் ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததோடு, சிறை தண்டனையை உறுதி செய்தது. குஜராத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் காங்கிரஸ் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் மறியல்

இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். சிலை முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் அமர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 51 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இந்த சாலை மறியலால் அங்கு சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாணார்பட்டி

அதேபோல் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில் ஆத்தூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி தலைமையில், ஆத்தூர் வட்டார தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலல் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாணார்பட்டி தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜ்கபூர் தலைமையில், வடக்கு வட்டார தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோபால்பட்டி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் செய்தனர். இதைத் தொடர்ந்து மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story