பெரம்பலூர் மாவட்டத்திலும் கூட்டுறவுத்துறையிலும் ஊழல் நடந்துள்ளது சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் குற்றச்சாட்டு


பெரம்பலூர் மாவட்டத்திலும் கூட்டுறவுத்துறையிலும் ஊழல் நடந்துள்ளது சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் குற்றச்சாட்டு
x

பெரம்பலூர் மாவட்டத்திலும் கூட்டுறவுத்துறையிலும் ஊழல் நடந்துள்ளது என சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், டாக்டர் சரஸ்வதி, சிந்தனை செல்வன், மாரிமுத்து, கார்த்திகேயன், பிரகாஷ், பூண்டி கலைவாணன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அக்குழுவினர் முதலில் கவுல்பாளையத்தில் இலங்கை தமிழ் மக்களுக்காக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 72 வீடுகளின் கட்டுமான பணிகளையும், பின்னர் எளம்பலூர் சமத்துவபுரத்தில் ரூ.79.40 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கிருந்த தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் அக்குழுவினர் பெரம்பலுார் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். திருநகரில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 1.5 ஏக்கர் அரசு நிலம் பாதுகாக்கப்பட்டு, முள்வேலி அமைக்கப்பட்டுள்ளதையும், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமோனைட்ஸ் மையத்தினையும் சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் அக்குழுவினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சியினை பார்வையிட்டு, மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 46 ஆயிரத்து 251 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதனை தொடர்ந்து அக்குழுவினர் அரசுத்துறைகளின் முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்ட அரசு திட்டங்கள் குறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையின் படி ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பொது கணக்கு குழுவினர் விரிவாக ஆய்வு செய்தனர். முடிவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நாங்கள் ஆய்வு செய்தது பெரம்பலூர் மாவட்டத்தில் 2011 முதல் 2021 ஆண்டு வரையிலான கடந்த கால ஆட்சியில் என்ன நடந்தது என்பது பற்றி தான். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகளுக்கு பராமரிப்பிற்காக அரசு ஒதுக்கிய தொகை பெரம்பலூர் மாவட்டத்திலும் வழங்கப்படாமல் அரசு கணக்கில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்துவரை சுமார் 250 ஏக்கர் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்று தணிக்கை குழு 2017-ம் ஆண்டு குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறது. ஆனால் மாவட்ட கலெக்டர் பொறுப்பேற்றவுடன் சில நிலங்களை ஆக்கிரமிப்புகாரர்களை அகற்றி விட்டு முள்வேலி போட்டு பாதுகாத்துள்ளார். மீதமுள்ள நிலங்களை மீட்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்குவதில் தமிழ்நாடு முழுவதும் முறைகேடு நடந்துள்ளன. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதிலும் கடந்த ஆட்சியில் தமிழ்நாடு அரசுக்கு மக்களின் வரிப்பணம் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அரசு சார்பில் வாங்கி கொடுக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சரியான காலக்கட்டத்தில் பராமரிக்காமலும், பயன்படுத்தாமலும் இருந்ததால் பராமரிப்பு செலவு ரூ.1 கோடியே 12 லட்சம் அரசுடைய பணம் விரயமாக்கிறது என்று தணிக்கை குழு சுட்டி காட்டுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கனிம வளத்துறையில் பொறுத்தவரை சுமார் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாவட்ட கலெக்டரும், கனிம வளத்துறை அதிகாரிகளும் இணைந்து அந்த வருவாயை திரும்ப பெற நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதே போன்று கூட்டுறவுத்துறையில் ஒரு அலகு பராமரிப்பதற்காக ஒரு ஒப்பந்ததாரிடம் கொடுக்கின்றனர். ஒரு திட்டத்திற்கு குறிப்பாக ரூ.11 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு ரூ.21 லட்சம் கொடுத்து கோடிக்கணக்கில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் என்ன ஊழல் நடந்ததோ, அதே போன்று தான் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்துக்கு அரசு மருத்துவக்கல்லூரி வரும், என்றார்.


Next Story