கூட்டுறவு துறையில் முத்திரை கட்டணம் வழங்கியதில் ஊழல்


கூட்டுறவு துறையில் முத்திரை கட்டணம் வழங்கியதில் ஊழல்
x

கூட்டுறவு துறையில் முத்திரை கட்டணம் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு குழு தலைவர் கூறினார்.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அந்த குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை, நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரியலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால், அரசுக்கு ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சமூக நலத்துறை சார்பில் விலையற்ற பொருட்களை சரியாக பரிசீலனை செய்யாமல் கொடுத்ததில் ரூ.3 கோடியே 23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த துறையின் செயலாளரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துள்ளோம். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கான பராமரிப்பு செலவு என்று அரசு ஒதுக்கிய நிதி ரூ.21 கோடியே 5 லட்சம் மானியமாக முழுவதும் வழங்கப்படாமல், அரசு கணக்கிற்கு மீண்டும் அனுப்பியுள்ளனர். இது உரிமை நிதியாக வழங்கப்படாமல் திருப்பி அனுப்பியுள்ளதை மாவட்ட நிர்வாகம், கணக்காயர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில், கூட்டுறவு துறையில் முத்திரை கட்டணமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுந்தர் ஸ்கேல் என்ற நிறுவனத்திற்கு, தமிழ்நாடு முழுவதும் ஒதுக்கப்பட்ட தொகையை விட ரூ.1 கோடியே 69 லட்சம் அதிகமாக கொடுத்துள்ளனர். இதற்கு தொகையில் ஒரு கோடு கூடுதல் காரணமாக உள்ளது என்று கூறுகின்றனர். இதனை கண்டுபிடித்து கேட்டபோது மீண்டும் அந்த தொகையை வாங்கி தருவதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். கூட்டுறவு துறையில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கனிம வளங்களை வெட்டி எடுத்ததில் தவறுகள் நடந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story