முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை


முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை
x

முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

முதியவர் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநாளூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் பாலன் (வயது 62). இவரது பங்காளி உறவு முறையில் தம்பியானவர் முரளி (38). இவர்களுக்கு இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி பாலன் தனது வீட்டின் முன்பு மகளுடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த முரளி மற்றும் அவரது மனைவி தேவி (33) ஆகியோர் சேர்ந்து பாலனையும் அவர்களது மகளையும் கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பாலன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளி மற்றும் அவரது மனைவி தேவியை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை

இந்தநிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் முரளி மற்றும் அவரது மனைவி தேவிக்கு தகாத வார்த்தைகளால் திட்டிய பிரிவில் தலா 3 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டையால் தாக்கியதற்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரமும், கொலை வழக்கில் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 லட்சம் அபராதமும், கட்டையால் கொடூரமாக தாக்கியதற்காக முரளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி கணவன், மனைவி இருவரும் ஆயுள் தண்டனையை அனுபவிப்பார்கள்.

நிவாரணம்

இந்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட தொகையை கொலையானவரின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட முரளியை திருச்சி சிறையிலும், தேவியை மகளிர் சிறையிலும் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


Next Story