வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி: அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானது தொடர்பான வழக்குகளில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானது தொடர்பான வழக்குகளில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
டிரைவருக்கு தண்டனை
நாகை மாவட்டம் கீழ்வேளுர் அருகே மணலூர் கூத்தங்குடியை சேர்ந்த சம்பந்தம் மனைவி சுசீலா(வயது 65). இவர், கடந்த 2017-ம் ஆண்டு அரசு பஸ்சில் மன்னார்குடி தெப்பக்குளம் வடகரை பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது டிரைவர் பஸ்சை திடீரென இயக்கியதால் சுசீலா கீழே விழுந்து இறந்தார்.
இதுதொடர்பான வழக்கு மன்னார்குடி கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நீதிபதி அமீர்தீன் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அப்போது அரசு பஸ் டிரைவர் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மங்கள்தேர் கிராமத்தை சேர்ந்த இன்பராஜ்(48) என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மற்றொரு விபத்து வழக்கு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலபனங்காட்டான்குடியை சேர்ந்தவர் ஜெயராமன்(59). இவர் கடந்த 2013-ம் ஆண்டு மன்னார்குடி நடராஜ பிள்ளை தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த மினிவேன் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கு மன்னார்குடி கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் மினிவேன் டிரைவர் கும்பகோணம் மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி(58) என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அமீர்தீன் உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.