கடலூரை அதிரவைத்த ஊராட்சி தலைவியின் கணவர் கொலை - பெண் உள்பட 11 பேர் கைது


கடலூரை அதிரவைத்த ஊராட்சி தலைவியின் கணவர் கொலை - பெண் உள்பட 11 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2023 3:00 AM GMT (Updated: 28 Jun 2023 3:10 AM GMT)

கடலூரை அதிரவைத்த ஊராட்சி தலைவியின் கணவர் கொலை வழக்கில் பெண் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர்,

கடலூர், தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மதியழகன் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உள்ளாட்சி மன்ற தேர்தல் முன்விரதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் தொடர்புடைய விஜய், அர்ஜுனன், முகிலன், குருநாதன், மணிகண்டன், பெண் வச்சலா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கின் முழுவிவரம்:-

கடலூர் தாழங்குடாவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் மதியழகன் (வயது 48). மீனவர். இவருடைய மனைவி சாந்தி (40). இவர் குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மதியழகன், தற்போது குடும்பத்தோடு கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 8 மணி அளவில் மதியழகன், அப்பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு அவர் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை துரத்தினர்.

இதில் பதறிய மதியழகன், கூச்சலிட்டபடி நடுரோட்டில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் ஓட, ஓட விரட்டிச் சென்று மதியழகனை நடுரோட்டிலேயே மடக்கி சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் மதியழகனின் தலை, முகம் பகுதிகளில் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மதியழகனின் முகத்தில் வெட்டிய ஒரு வீச்சரிவாளையும் எடுக்காமல், அப்படியே விட்டுச் சென்றனர். இதனால் மதியழகனின் முகம் முற்றிலும் சிதைந்து கொடூரமாக காட்சியளித்தது.

அதைத்தொடர்ந்து போலீசார், கொலை செய்யப்பட்ட மதியழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி சாந்தி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி, அவரது தரப்பை சேர்ந்த பிரகலாதன், தினேஷ், ஆறுமுகம் என்கிற அறிவு, பாரதி, ராமானுஜம், விஜய், சஞ்சய்குமார், குருநாதன், ராஜேந்திரன், ராமலிங்கம், முத்து, மைக்கேல், பாலமுருகன், மணிகண்டன், தேவேந்திரன், சந்திரவாணன், சரவணன், அர்ஜூனன், ராஜவேல், ராஜேஷ், அந்தோணிசெல்வம், புதுச்சேரி வீராம்பட்டினம் ஆகாஷ், பிரகாஷ் மனைவி வச்சலா ஆகிய 24 பேர் சேர்ந்து, மதியழகனை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தாழங்குடாவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி மனைவி பிரவினாவும், மதியழகன் மனைவி சாந்தியும் குண்டுஉப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் சாந்தி வெற்றி பெற்றார். இந்த தேர்தல் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே 1.8.2020 அன்று இரவு மதியழகன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மாசிலாமணியின் தம்பி மதிவாணனை (36) வெட்டிக் கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக மதியழகன் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய மதியழகன் உள்ளிட்ட 10 பேர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த மதியழகன், சொந்த ஊரான தாழங்குடாவுக்கு சென்றால், மாசிலாமணி தரப்பால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி, ஊருக்கு செல்லாமல் மஞ்சக்குப்பத்திலேயே இருந்து வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் மதிவாணன் கொலை வழக்கில் பழிக்கு பழியாக இந்த கொலையை அவர்கள் அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, கவிதா, உதயகுமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து, கொலையாளிகளை தேடி வந்தனர். அப்போது, மதியழகனை கொலை செய்து விட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு தப்பி செல்ல முயன்ற 10 பேரை தனிப்படை போலீசார் கடலூர்-விழுப்புரம் மாவட்ட எல்லையில் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர்களை கடலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த கொடூர கொலை சம்பவம் கடலூர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story