நெற்பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி


நெற்பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி
x

மயிலாடுதுறை பகுதியில் நெற்பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை பகுதியில் நெற்பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

குறுவை சாகுபடி

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மேட்டூர் அணை கடந்த மே மாதம் 24-ந் தேதி திறக்கப்பட்டது. வழக்கமாக குறுவை சாகுபடி பணிகளுக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் உற்சாகத்துடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகாக்களில் விவசாயிகள் பம்புசெட் மற்றும் ஆற்று நீர் பாசனம் மூலம் குறுவை சாகுபடி பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

பூச்சி தாக்குதல்

மயிலாடுதுறை பகுதியில் நடவு பணிகள் முடிவடைந்து நாற்றுகள் இளம் பயிர்களாக கதிர் பிடிக்கும் நிலையில் உள்ளன.

இந்த பயிர்களில் தற்போது குருத்துப்பூச்சி, இலை சுருட்டுப் பூச்சி, நாற்றங்கால் பூச்சி, பச்சை பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.

இந்த பூச்சிகள் இலைகளை சுரண்டி சாற்றை உறிஞ்சுவதாகவும், இதனால் பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி நுனி சுருண்டு வாடி விடுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தினை தண்ணீரில் கலந்து ஸ்பிரேயர் மூலம் வயல்களில் தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பூச்சி தாக்குதலால் மகசூல் குறையும் என விவசாயிகள் கூறுகிறார்கள்.

கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளதாகவும் அரசு மானியத்தில் வழங்கக்கூடிய யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்களை விரைவில் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story