ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்க கோரிக்கை


ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2023 7:39 PM GMT (Updated: 6 Jun 2023 6:14 AM GMT)

ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தாமரைக்குளம்:

குறை தீர்க்கும் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் திருமானூர் ஒன்றியம் செம்பியக்குடி குலமாணிக்கம் புனித சவேரியார் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் ஒரு மனு அளித்தனர்.

அதில் நாங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பொதுக்கழிப்பிடத்தை வேறு இடத்தில் கட்டி தரக்கோரி மனு அளித்து வருகிறோம். குடியிருப்பு பகுதியில் பொதுக் கழிப்பிடம் கட்டுவதால் மிகுந்த சுகாதார சீர்கேடு ஏற்படும். நாங்கள் இந்தத் திட்டத்தை எதிர்க்கவில்லை. மாறாக தற்போது கட்டப்படும் இடத்தில் இருந்து தள்ளி கட்டுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். ஆனால் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டர் இது குறித்து ஆய்வு செய்து, பொதுக் கழிப்பிடம் கட்டும் இடத்தை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் சுப காரியங்கள் உள்ளிட்ட சடங்குகளை எங்கள் குல தெய்வமான புதுக்குடி அய்யனார் கோவிலில் செய்து வந்தோம். கோவிலின் திருப்பணிக்காக நன்கொடைகளையும் கொடுத்துள்ளோம். ஆனால் தற்போது எங்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. சடங்குகளையும் செய்ய விடுவதில்லை. எனவே எங்களை கோவிலுக்குள் அனுமதிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது காணிக்கைகளை செலுத்தவும் அனுமதிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

கடுகூர் பொய்யூர் கிராமத்தில் காலனி தெருவில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 25 குடும்பங்களை சேர்ந்த சுமார் 100 பேர் வசித்து வருகிறோம். கால்வாய் கட்ட வேண்டி பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தோம். அதன்பேரில் தற்போது கால்வாய் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் கால்வாய் செல்லக்கூடிய பகுதியில் சிலர் ஆக்கிரமித்துள்ளதால், கால்வாய் கட்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே கலெக்டர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைத்திட வழிவகை செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மகளின் சாவு குறித்து தாய் மனு

அல்லிநகரத்தை சேர்ந்த அமுதா அளித்த மனுவில், நான் எனது கணவரை இழந்து வசித்து வருகிறேன். எனது மூத்த மகள் அபிநயா ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து, குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 31-ந் தேதி எனது மகள் இறந்து கிடப்பதாகவும், உடல் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளதாகவும் தகவல் கிடைத்தது. அங்கு சென்றபோது போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்திருந்தனர். பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பார்த்திபனை கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

எனது மகள் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனது மகளை திட்டமிட்டு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே பார்த்திபனுக்கு உடந்தையாக உள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும். சந்தேகம் மரணம் என்று வழக்குப்பதிவு செய்திருப்பதை மாற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும். எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிவாரணமும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நிழற்குடை

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் தண்டபாணி அளித்த மனுவில், அரியலூரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்காலிக பஸ் நிலையம் அரியலூர் புறவழிச்சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான பொதுமக்கள் அரியலூர் பழைய பஸ் நிலையம் அருகே நின்று, பஸ்களில் ஏறி செல்கின்றனர். வெயிலிலும், மழையிலும் ஒதுங்குவதற்கு இடமில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான நிழற்குடை, கழிப்பட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று, கூறியிருந்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story