வேலையில் சேர அனுமதி மறுப்பு:ஆவின் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


வேலையில் சேர அனுமதி மறுப்பு:ஆவின் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

தேனியில் வேலையில் சேர அனுமதி மறுத்ததால் ஆவின் அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தேனி

ஆவின் ஊழியர்கள்

ஆவின் நிறுவனத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து தமிழகத்தில் 201 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பணி நீக்க உத்தரவுக்கு கடந்த ஜனவரி மாதம், கோர்ட்டு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் ஊழியர்கள் தங்களை பணியில் சேர்க்கக் கோரி அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால், அவர்கள் பணியில் சேர்க்கப்படவில்லை.

உள்ளிருப்பு போராட்டம்

இந்நிலையில், தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்துக்கு சுமார் 20 ஊழியர்கள் நேற்று வந்தனர். அவர்கள் தங்களை கோர்ட்டு உத்தரவுப்படி, பணியாற்ற அனுமதிக்குமாறு கேட்டனர். ஆனால், ஆவின் அதிகாரிகள் அவர்களுக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஊழியர்கள் காலை 11 மணியளவில் அங்கு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 7 மணி வரை போராட்டம் நீடித்தது. பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூறி கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறும்போது, 'திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். அதுபோல், தேனியில் சேர்க்க மறுக்கிறார்கள். நாங்கள் எந்த முறைகேடும் செய்யாமல், தேர்வில் பங்கேற்று முறையாக தேர்வு செய்யப்பட்டவர்கள். எனவே, எங்களின் பணியை பறிக்கக்கூடாது' என்றனர்.


Related Tags :
Next Story