தர்மபுரியில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 431 மனுக்கள் குவிந்தன


தர்மபுரியில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 431 மனுக்கள் குவிந்தன
x
தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:47 PM GMT)
தர்மபுரி

தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 431 மனுக்கள் குவிந்தன.

பஸ் வசதி

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி, இலவச வீட்டு மனைபட்டா, குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், முதியோர் ஓய்வூதியம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். மொத்தம் 431 மனுக்கள் குவிந்தன.

தர்மபுரி மாவட்டம் பாகலஅள்ளி ஊராட்சி குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லாததால் சேசம்பட்டி பகுதிக்கு வந்து பஸ்சில் செல்ல வேண்டும். இதற்காக கிராம மக்கள் விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள வழிப்பாதையை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த வழிப்பாதையை அடைக்க முயற்சி நடக்கிறது. தொடர்ந்து கிராம மக்கள் அந்த வழிப்பாதையை பயன்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பணி நியமன ஆணை

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றை துறை அதிகாரிகளிடம் வழங்கி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் பதிவு செய்தவர்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 16 பேருக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் தொகைக்கான காசோலை, 2 பேருக்கு பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா, ஒருவருக்கு கருணை அடிப்படையில் சமையல் உதவியாளர் பணி நியமன ஆணை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

இதில் கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story