திருத்தணி அருகே கோவில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே தகராறு


திருத்தணி அருகே கோவில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே தகராறு
x

திருத்தணி அருகே கோவில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கோவில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஒரு சமுதாயத்தினர் கோவில் விழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு மற்கொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை நேற்று முன்தினம் இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேசினார். முடிவு எட்டப்படாத நிலையில், இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஒ. ஹஸ்ரத்பேகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை தாழவேடு கிராமத்தை சேர்ந்த இரு சமூகத்தினரும் ஆர்.டி.ஒ. தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். நேற்று காலை 11 மணிக்கு ஆர்.டி.ஒ. ஹஸ்ரத்பேகம், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் மத சுதந்திரம் என்பது அனைவருக்கும் வழங்கப்பட்ட உரிமை, இந்த திருவிழாவால் மாற்று சமுதாயத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் விழாவை நடத்த தடையில்லை என ஆர்.டி.ஒ. ஹஸ்ரத்பேகம் தெரிவித்தார். பின்னர் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் விழா நடத்த சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் திருவிழா பலத்த பாதுகாப்புடன் நடந்தது.


Next Story