நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. ஒரே நிலைப்பாட்டில் உள்ளது
நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. ஒரே நிலைப்பாட்டில் உள்ளது அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் விவகாரத்தில் தி.மு.க. ஒரே நிலைப்பாடு தான் எடுத்துள்ளது. நீட் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு. மதுரை மாநாட்டிற்கு கூட்டம் சேர்க்க முடியாது என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது. அதனால் தான் அவர் தி.மு.க. மீது பழி போடுகிறார். அ.தி.மு.க.வினர் பொதுமக்களை திருப்பரங்குன்றம் போகலாம், அழகர் மலைக்கு போகலாம் என்று ஊர் ஊராக சென்று அழைத்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் செல்ல தயாராக இல்லை. அதனால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டது. நாங்கள் எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அன்றைய தினம் உண்ணாவிரதம் இருக்க போகிறோம்.
கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கண்டிப்பாக தமிழக அரசு மாற்றும். அதன் பிறகு நீட் விலக்கு பெறப்படும். காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவுபடி கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும். முதல் கட்டமாக 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்புப்படி நமக்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் நிலைபாடு. சேலம் மத்திய சிறையில் சாராய ஊறல் கண்டுபிடித்துள்ளதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அது போன்று எதுவும் நடக்கவில்லை. சிறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் கண்காணிப்புகள் உள்ளதால் அதற்கு வாய்ப்பு கிடையாது. பலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.