பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா?


பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா?
x

பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது அளவு குறைகிறதா? என்பது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள், வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை

கார், பைக்குகளுக்கு பெட்ரோல் நிரப்ப செல்பவர்கள் சில குறிப்பிட்ட பங்குகளுக்கு செல்வதை பார்த்து இருக்கிறோம். அவர்களிடம் அதுபற்றி கேட்டால், அந்த பெட்ரோல் பங்கில்தான் அளவு சரியாக இருக்கும். பெட்ரோல் சுத்தமாக இருக்கும். கூடுதல் கிலோ மீட்டர் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. அது சரியாக இருக்குமா?

பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது, அளவு வேறுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா?

இதுபோன்ற சந்தேகங்களுக்கு பெட்ரோல் பங்கு ஊழியர், எண்ணெய் நிறுவன அதிகாரிகள், வாகன ஓட்டிகள், வாடிக்கையாளர் போன்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-

ஊழியர்கள் அவசரப்படுத்தக்கூடாது

மணமேல்குடியை சேர்ந்த ராஜலெட்சுமி:- பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடும்போது ஊழியர்கள் அவசரப்படுத்தக்கூடாது. மேலும் 100 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்டால் ரெசிவரில் 100 ரூபாய் தட்டி விட்டு பெட்ரோல் பம்ப்பை உடனே எடுத்து விடுகிறார்கள். இதனால் பெட்ரோல் முழுவதுமாக டேங்கில் நிரப்பப்படுவது கிடையாது. ஏற்கனவே பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்தநிலையில் பெட்ரோல் விலையை அரசு அறிவித்த உடனே விலை உயர்த்தாமல் இரவு 12 மணிக்கு மேல் விலையை உயர்த்த வேண்டும்.

எரிபொருள் நிரப்பும் சூழ்நிலை

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மேரி:- சில பெட்ரோல் பங்குகளில் கொடுக்கிற காசுக்கு சரியாக பெட்ரோல் போடுகிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் சரியாக போடுவதில்லை. இதனால் அடிக்கடி எரிபொருள் நிரப்பும் சூழ்நிலை உருவாகிறது. இதுபோன்ற தவறுகளை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரம், அடர்த்தி சோதனை

அரிமளத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் அய்யனார்:- தினமும் காலை பெட்ரோல் பங்க் விற்பனை தொடங்குவதற்கு முன்பு 5 லிட்டர் குவளையில் பெட்ரோலை பிடித்து மிஷின் சரியாக இயங்குகிறதா?, அளவு சரியாக உள்ளதா? என பரிசோதிப்போம். பின்னர் டீசல் அடர்த்தி சரியாக உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்வோம். எங்கள் பெட்ரோல் பம்பில் நிறுவப்பட்டுள்ள ஏ.டி.ஜி. மிஷின் மூலம் பெட்ரோல் தரத்தையும், இருப்பு பெட்ரோல், டீசல் அடர்த்தி ஆகியவற்றை பரிசோதிப்போம். ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல் பங்கில் உள்ள பம்ப் நாசியில் தரப்பரிசோதனை செய்யப்படும். இந்த தரப்பரிசோதனையில் பம்ப் சர்வீஸ் என்ஜினீயர், மாவட்ட தொழிலாளர் நல அதிகாரி ஆகியோர் வந்து நாசில் மற்றும் பம்பு ஆகியவற்றை ஆய்வு செய்வார்கள். பின்னர் நாசினில் எந்தவிதமான தவறும் செய்துவிடக்கூடாது என்பதற்காக நாசில் சீல் வைத்து விட்டு செல்வார்கள். அதன் பின்னர் 5 லிட்டர், 7 லிட்டர் என பிடித்து அளவு பார்த்து அளவு சரியாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து பெட்ரோல் பங்க் செயல்பட சான்றிதழ் வழங்குவார்கள். பெட்ரோல் போடும் பம்பில் நாம் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் ஆன்லைன் மூலமாக இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு போய்விடும். அங்கு அபாய அலாரம் அடிக்கும். உடனடியாக அங்குள்ள அதிகாரிகள் தொடர்பு கொண்டு என்ன குறைபாடு உள்ளது என்பதை தெரிவிப்பார்கள். அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பில்டர் பேப்பர் இருக்கும். அதன் மூலம் பெட்ரோல் தரத்தை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். பெட்ரோலில் ஏதாவது கலப்படம் செய்திருந்தால் அந்த பேப்பரின் நிறம் மாறும். பேப்பரில் திக்னஸ் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதை வைத்து தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் போடும் பொழுது அளவு அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் சரியாகத்தான் இருக்கும். மீட்டர் ஜம்ப் ஆகிறது என்று சொல்வதெல்லாம் தவறு. அதற்கான வாய்ப்பே இல்லை. தற்போது அனைத்து பெட்ரோல் பங்குகளும் எண்ணெய் நிறுவனத்துடன் கணினி வழியாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே பெட்ரோல் பங்குகளில் குறைவாக பெட்ரோல் போடுகிறார்கள். இங்கு பெட்ரோல் போட்டால் தரம் குறைவாக இருக்கும் என கூறுவது எல்லாம் சரி அல்ல.

பெட்ரோல் குறைய வாய்ப்பே இல்லை

புதுக்கோட்டை பெட்ரோல் பங்க் உரிமையாளர் கலியமூர்த்தி:- பொதுவாக பெட்ரோல் பங்குகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெட்ரோல் பங்க் டேங்கில் உள்ள பெட்ரோல், டீசல் ஆகியவைகளின் அளவு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஊற்றப்படும் பெட்ரோலின் அளவு உள்பட அனைத்தையும் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. எனவே பெட்ரோல் குறைவதற்கான வாய்ப்பே இல்லை. கோடை காலங்களில் லாரியில் இருந்து லோடு இறக்கும் போது ஆவியாகக்கூடிய பெட்ரோல் இழப்பு ஏற்படும். அந்த இழப்பை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.

எந்திரம் தவறு செய்யாது

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி.முரளி:- அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவுப்படி 'ஆட்டோ மெஷின்' என்று அழைக்கப்படும் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் வகையில் செயல்படும் தானியங்கி எந்திரம் கொண்ட பம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 800 பங்குகளில் 80 முதல் 90 சதவீதம் பங்குகளில் இதுபோன்ற தானியங்கி எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எந்திரம் தவறு செய்யாது. சரியான அளவில் பெட்ரோல் போடவில்லை என்று உணரும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்கு மேலாளரிடம் சென்று தொழிலாளர் துறை பரிசோதித்து வழங்கி உள்ள 5 லிட்டர் கேனில் எரிபொருள் நிரப்பி அளவை உறுதி செய்து காண்பிக்கச் சொல்லலாம். அதேபோல் கொடுக்கிற பணத்திற்கு சரியான அளவில் எரிபொருள் போடப்படுகிறதா? என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். அதேபோல் நாசில் வழியாக எரிபொருள் போடும் போது தவறு நடக்க வாய்ப்பு இல்லை. பெட்ரோல் போட்டுவிட்டு கூகுள்பே மூலம் பணம் செலுத்தும் போது, செலுத்தப்பட்ட நேரத்தை துல்லியமாக கூறினால் அதனை தானியங்கி எந்திரம் மூலம் சரியான அளவில் பெட்ரோல் போடப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க முடியும். அதேபோல் தானியங்கி எந்திரத்தில் ரூ.200-க்கு பெட்ரோல் போடுவதாக டைப் செய்துவிட்டு, வாகனத்தில் ரூ.100-க்கு மட்டும் எரிபொருள் வழங்கிவிட்டு, இணைப்பை துண்டித்தால் தானியங்கி எந்திரம் பழுதாகிவிடும். அதற்கு பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் பழுதைத் சரிசெய்ய முடியும். வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல் பங்கு வளாகத்தில் கண்காணிப்பு கேமரா, தானியங்கி எந்திரத்தில் கேமரா மற்றும் குரல் பதிவு கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. தவறை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எண்ணெய் நிறுவனம் மறுப்பு

இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள்:- எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் தரமாகவும், அளவு எப்போதும் சரியான முறையிலும் வழங்கப்பட வேண்டும் என்று பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்தி வருகிறோம். இதில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. இதற்காக அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டு, அவை அனைத்தும் இந்திய எண்ணெய் நிறுவன அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட தொகையை பதிவு செய்துவிட்டு அதைவிட குறைவான அளவு எரிபொருள் வழங்கினால் எந்திரம் இணைப்பு துண்டிப்பாகி, அடுத்த வாடிக்கையாளருக்கு எரிபொருள் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும். பிறகு எண்ணெய் நிறுவன அதிகாரிகள்தான் துண்டிக்கப்பட்ட இணைப்பைச் சரி செய்ய முடியும் என்பதால் தவறுக்கு வாய்ப்பு இல்லை. அதேபோல் பெட்ரோல் போடுவதற்கு முன்பு மீட்டரில் சைபர் என்று இருப்பதை பார்த்து கொள்ள வேண்டும். எரிபொருள் நிரப்பப்பட்ட உடன் நாம் வழங்கிய தொகைக்கு எரிபொருள் வழங்கியதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக அவ்வப்போது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் திடீர் சோதனை செய்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் இந்திய எண்ணெய் நிறுவன முகநூல் பக்கம், டுவிட்டர், 'MoPNG E Seva' என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story